http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__917232692241669.jpg

கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தி அடியோடு நிறுத்தம்: தமிழகத்திற்கு 1000 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையதின் இரண்டு அலகுகளிலும் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி தடைபட்டுள்ளதால் தமிழகத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இரண்டாவது அலகில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த டிசம்பர் முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 300 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட முதல் அலகிலும் கடந்த செவ்வாய்கிழமை முதல் உற்பத்தி தடைபட்டுள்ளது. இதனை தொடர்ந்து, நாட்டின் இதர அணுமின் நிலையங்களின் உற்பத்தி திறனோடு ஒப்பிடுகையில் கூடங்குளம் ஆலை மிகவும் பின்தங்கியுள்ளது.

இந்த நிலையில் உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் நிலைமையை சமாளிக்க அனல்மின் நிலைய உற்பத்தியை முழு வேகத்தில் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான டேன் ஜெட் கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பிப்ரவரி மாதம் அதிகபட்ச தினசரி மின்தேவை 14 ஆயிரத்து 500 மெகாவாட்டுகளாக அதிகரித்துள்ளது. காற்றாலை மின் உற்பத்தி மாலை நேரங்களில் மட்டுமே கிடைப்பதால் மின்வெட்டை தவிர்ப்பதற்காக மற்ற அணுமின் நிலையங்கள் மற்றும் மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.