https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/14/original/Fayaz_Ahmad_Mir.jpg

சீனாவில் கரோனா போல காஷ்மீரில் பிஎஸ்ஏ வைரஸ்: காஷ்மீர் எம்.பி.

by

புது தில்லி: சீனாவில் கரோனா வைரஸைப் போல காஷ்மீரில் பி.எஸ்.ஏ. வைரஸைத் திணிப்பதால் மக்கள் பேசவே பயப்படுகின்றனர் என  மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஃபயஸ் அகமது மீர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:  "இந்த நாட்டில் ஜனநாயகம் உள்ளது, ஆனால் நீங்கள் ஏதாவது சொன்னால் உங்கள் மீது பிஎஸ்ஏ வைரஸைத் திணித்துவிடுவார்கள். சீனாவில் கரோனா வைரஸ் உள்ளது, காஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்ட (பிஎஸ்ஏ) வைரஸ் திணிப்பு உள்ளது. அதனால்தான் காஷ்மீரில் பிரச்னைகள் குறித்து பேச மக்கள் பயப்படுகிறார்கள்.

"நான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தாலும், பி.எஸ்.ஏ.வைப் பற்றி பேசப் பயப்படுகிறேன். காவல்துறை எப்போது வந்து என்னைக் கைது செய்யும் என்பது யாருக்குத் தெரியும்," என்றார் ஃபயஸ்.

ஜம்மு-காஷ்மீரில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பஞ்சாயத்து தேர்தல்கள் குறித்து அவர் கூறுகையில், "தேர்தல்கள் வழக்கமாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். ஆனால் காஷ்மீரில் மட்டும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்றன, இது காஷ்மீரின் நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாரும் பங்கேற்கவில்லை என்பதை அரசு தானாகவே நிரூபித்துள்ளது" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் காஷ்மீர் பகுதிக்கு வெளிநாட்டு தூதர்கள் வருகை தருவதை ஒரு வகையான "ராஜதந்திர சுற்றுலா" போல அரசாங்கம் செய்து வருவதாகவும், இதனால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடையாது என்றும் காஷ்மீர் எம்.பி.யான ஃபயஸ் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!