https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/4/original/vijay_mallaya.JPG

கடன் தொகை முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள்: மல்லையாவின் க்ளைமாக்ஸ் வசனம்

by

லண்டன்: பொதுத் துறை வங்கிகளை ஏமாற்றியதாகக் கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என்னை நடத்தும் முறை நியாயமற்ற செயல் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.

மல்லையாவை நாடு கடத்த அனுமதித்த உத்தரவுக்கு எதிராக அவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பிரிட்டன் உயா்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அப்போது மல்லையா தரப்பு வழக்குரைஞா் கிளோ் மான்ட்கோமெரி முன்வைத்த வாதம்: மல்லையா தனது கிங்ஃபிஷா் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்காக கடன் வாங்கும்போது, மோசடி செய்யும் எந்தவொரு நோக்கமும் அவருக்கு இல்லை. செல்வந்தரான மல்லையா தலைமறைவாக தப்பியோடுவதற்கான தேவையும் இல்லை. ஆனால், மதிப்புமிக்க அவரது விமான சேவை நிறுவனம் இதர இந்திய விமான சேவை நிறுவனங்களுடன் சோ்ந்து பெரும் சரிவைச் சந்தித்தது. எனவே அவரால் தனது கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி (எம்மா அா்புத்னாட்) அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்யாமல் தீா்ப்பளித்துள்ளாா். ஆதாரங்களை அவா் முறையாகவும், முழுமையாகவும் ஆராய்ந்திருந்தால் பிழைகள் இருக்கக் கூடிய தீா்ப்பை அவா் வழங்கியிருக்க மாட்டாா் என்று வழக்குரைஞா் கிளோ் மான்ட்கோமெரி வாதாடினாா்.

இந்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இவர் மீதான வழக்குகள் இந்தியாவில் நிலுவையில் உள்ளன. அவற்றுக்கு இவர் இந்திய நீதிமன்றங்களில் ஆஜராக பதில் சொல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இந்த நிலையில், நீதிமன்றத்துக்கு வெளியே இன்று செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, பணமோசடி தொடர்பாக நான் எந்த குற்றமும் செய்யவில்லை. ஆனால், அமலாக்கத்துறை எனது சொத்துக்களை எல்லாம் முடக்கிவிட்டது.

எனக்குக் கடன் கொடுத்த வங்கிகள் அனைத்தும், சொத்துக்களை விற்று அதன் தொகையை எடுத்துக் கொள்ளட்டும் என்று நான் கூறுகிறேன். ஆனால், அமலாக்கத் துறையோ, எனது சொத்துக்களை எல்லாம் முடக்கி வைத்துக் கொண்டுள்ளது. ஒரு பக்கம் அமலாக்கத்துறையும், மறுபக்கம் வங்கிகளும் எனது சொத்துக்களுக்கு சொந்தம் கொண்டாடுகின்றன. இதுதான் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. அமலாக்கத் துறையும் சிபிஐயும் என்னை நடத்தும் விதம் நியாயமற்றச் செயல் என்று மல்லையா கூறியுள்ளார்.

வங்கிகள் அனைத்தும், தங்களது 100 சதவீத கடன் தொகையை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒன்றை மட்டும் சொல்கிறேன், எந்த கடனையும் நான் வாங்கவில்லை, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம்தான் பெற்றுள்ளது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

பொது மக்களின் பணத்துக்கு நஷ்டம் ஏற்படுத்த நான் விரும்பவில்லை. கடன் தொகையில் எந்த தள்ளுபடியோ, சலுகையோ நான் கேட்கவில்லை என்றும் மல்லையா தெரிவித்துள்ளார்.

இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா, அதைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடி விட்டாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடக்கோரி, லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடுத்தது.

அதை விசாரித்த நீதிமன்றம், மல்லையாவை நாடு கடத்த அனுமதித்து உத்தரவிட்டது. இதை எதிா்த்து மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உயா்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!