கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா அடுத்த மாதம்
வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா அடுத்த மாதம் 06, 07 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பீரதீபன் தெரிவித்தார்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் முன்னேற்பாடுகள் தொடர்பாக உயர் மட்டக் கலந்துறையாடல் இன்று யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பீரதீபன் தலைமையில் நடைபெற்றது.
இவ் உயர் மட்டக் கலந்துரையாடலில் 2 நாட்களுக்கு பக்தர்கள் தங்குமிட வசதிகள், படகுச் சேவைகள், உணவுகள், பொலிஸார், இராணுவ, கடற்படை ஆகியோர்களின் கடமைப் பொறுப்புகள், மலசலகூட வசதிகள், மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பீரதீபன், 6 ஆம் திகதி காலை 06 மணியில் இருந்து 10 வரையும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் குறிகட்டுவானில் இருந்து கச்சதீவுக்கு ஒரு வழிக் கட்டணமாக 325 ரூபாவும், நெடுந்தீவு தீவில் இருந்து கச்சதீவுக்கு ஒரு வழி மார்க்கமாக 250 ரூபாவும் அறவிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இம்முறை இந்தியாவில் இருந்து சுமார் 3000 பக்தர்களும், இலங்கையில் இருந்து 7000 பக்தர்களும், மொத்தமாக 10,000 பக்தர்கள் கலந்துகொள்ளுவர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நயினாதீவில் இருந்து 20 படகுச் சேவைகளும், நெடுந்தீவில் இருந்து 04 படகுச் சேவைகளும், ஊர்காவற்துறையில் இருந்து 07 படகுச் சேவைகளும் மொத்தமாக 31 படகுச்சேவைகள் புனித கச்சதீவு அந்தோணியார் ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றி இறக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
-யாழ். நிருபர் ரமணன்-