தமிழக பட்ஜெட்: தலைவர்கள் கருத்து
by DIN2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து சட்டப்பேரவையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள பத்தாவது பட்ஜெட் யாருக்கும், எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சியை ஏற்படுத்துவதையோ, வேலைவாய்ப்பை பெருக்குவதையோ, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையோ நோக்கமாகக் கொண்டு அமையாத நிலையில் அ.தி.மு.க.வின் இறுதி பட்ஜெட் மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: அலங்கார வார்த்தைகளால் கட்டப்பட்ட தோரணங்களாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. இது அஇஅதிமுக தேர்தல் பரப்புரைக்கான தயாரிப்பு தவிர வேறொன்றும் இல்லை.
பாமக நிறுவனர் ராமதாஸ்: 2020-21 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாசனத் திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் தேவையான எல்லா வளங்களும் இந்த பட்ஜெட் மூலம் நேரடியாக செற்டைய வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: தமிழகத்தின் கடன் சுமை ரூ.5 லட்சமாக இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை நிதிநிலை அறிக்கை. வேளாண் தொழிலைப் பாதுகாக்கவும், விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் இந்த நிதிநிலை அறிக்கையில் உருப்படியான திட்டங்கள் இல்லை.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தெளிவான செயல் திட்டங்கள் இல்லாமல் போகிறபோக்கில் அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதன் மூலம் காற்றில் வரைந்த ஓவியமாக பழனிசாமி அரசின் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: நிதி வருவாயை அதிகரிப்பதற்கும், நிதி பற்றாக்குறையை போக்குவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகின்ற காலங்களில் மக்கள் நலன் திட்டங்களுக்கு நிதியே இருக்காது. அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறோம்.