https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/14/original/pdk14bookfair.jpg
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா- ஆட்சியர் தொடங்கி வைத்தார்

by

புதுக்கோட்டை:  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 4ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை நகர்மன்ற வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வெள்ளிக்கிழமை காலை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து புத்தகக் கண்காட்சி வளாகத்திலேயே தொல்லியல் துறையால் அமைக்கப்பட்டுள்ள கீழடி அரங்கையும் ஆட்சியர் திறந்து வைத்தார்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெ.வே. அருண்ஷக்திகுமார் கோளரங்கத்தைத் தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் பேசும்போது, புத்தகத் திருவிழாக்களை பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பேசும்போது, பொதுவாக நிறைய படித்திருப்பதாக நினைப்போர் கூட புத்தகத் திருவிழாவுக்குள் நுழைந்தால்தான் எவ்வளவு படித்திருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்வார்கள் என்றார்.

தொடக்க விழாவுக்கு கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார்.

விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் நா. முத்துநிலவன், அ. மணவாளன், மு. முத்துக்குமார், ம. வீரமுத்து, க. சதாசிவம், ஆர். ராஜ்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தமிழகத்தின் பிரதான புத்தக விற்பனையாளர்களின் 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தக் கண்காட்சி திறந்திருக்கும். அனுமதி இலவசம். வரும் பிப். 23ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!