https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/14/original/parasite1.jpg

ஆஸ்கர் வென்ற ‘பாரசைட்‘ படம் மீது வழக்கு தொடுக்கவுள்ள தமிழ் தயாரிப்பாளர்!

by

ஆஸ்கர் வென்ற ‘பாரசைட்‘ படம் மீது தமிழ்த் தயாரிப்பாளர் தேனப்பன் வழக்கு தொடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சா்வதேசத் திரையுலகமும், திரைப்பட ரசிகா்களும் ஆவலுடன் எதிா்பாா்த்துக் காத்திருந்த 92-ஆவது ஆஸ்கா் விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. கொரிய மொழியில் எடுக்கப்பட்ட சா்வதேச அளவில் கவனம் ஈா்த்த ‘பாரசைட்’ திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த சா்வதேச திரைப்படம் (அயல்மொழி), சிறந்த இயக்குநா், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் 4 ஆஸ்கா் விருதுகளை அள்ளியது.

தென்கொரியாவில் முன்னணி இயக்குநரான போங் ஜூன் ஹோ, இந்தப் படத்தின் இயக்குநர். கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தை கொரிய சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ஆசிய கண்டத்தில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இயக்குநர் என்ற சாதனையை படைத்துள்ளர் போங் ஜூன் ஹோ.

இந்நிலையில் பாரசைட் படத்தின் கதை, விஜய் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ல் வெளியான மின்சார கண்ணா படத்தைப் போலவே உள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் சிலர் பதிவுகள் எழுதியுள்ளார்கள். 

ஏழ்மை காரணமாக, பணக்காரக் குடும்பத்தில் பொய் சொல்லி வேலைக்குச் சேர்கிறான் இளைஞன். பணக்கார வீட்டுப் பெண் அவனை விரும்புகிறாள். பிறகு மேலும் பல பொய்கள் சொல்லி தன் வீட்டு உறுப்பினர்களை அந்தப் பணக்கார வீட்டில் வேலைக்கு அமர்த்துகிறான். அந்தக் குடும்பத்தில் பணியாற்றும்போது கிடைக்கும் சொகுசு வாழ்க்கை அவர்களை ஈர்க்கிறது. ஆனால் அதுவே அவர்களுக்கு மேலும் பல சிக்களைக் கொண்டு வருகிறது. - இது பாராசைட் கதை.

பணக்காரரான விஜய், குஷ்புவின் தங்கையைக் காதலிக்கிறார். இதனால் அந்தப் பணக்காரக் குடும்பத்தில் பாதுகாவலர் போல உள்ளே நுழைகிறார். அப்படியே பணியாளர்களாக விஜய் குடும்பத்தினர் குஷ்புவின் வீட்டுக்குள் நுழைந்து விஜய்யின் காதலுக்கு உதவி செய்கிறார்கள். கடைசியில் குஷ்புவின் மனத்தை மாற்றி காதலியைக் கைப்பிடிக்கிறார் விஜய் - இது மின்சார கண்ணா கதை. 

இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபமெடுக்கும் போலத் தெரிகிறது. 

பாரசைட் படக்கதை மின்சார கண்ணா படம் போல உள்ளதே என்கிற கேள்விக்கு, அப்படியொரு கதையை 20 வருடங்களுக்கு முன்பே நான் தேர்வு செய்ததை எண்ணி மகிழ்கிறேன். படத்தின் உரிமை தயாரிப்பாளர் தேனப்பனிடம் தான் உள்ளது. அவர் தான் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறியுள்ளார் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார். 

இந்நிலையில் ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் தேனப்பன் கூறியுள்ளதாவது: வெளிநாட்டு விவகாரம் என்பதால் அதற்குரிய வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். விரைவில் தகவல் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார். 

தயாரிப்பாளரின் இந்தப் பேட்டி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. எனினும் நிஜமாகவே பாரசைட் படக்குழு மீது தேனப்பன் வழக்கு தொடுக்கப் போகிறாரா அல்லது இதில் வழக்கு தொடுக்க வாய்ப்பில்லை எனப் பிறகு முயற்சியைக் கைவிடுவாரா என்பது இனிமேல் தான் தெரியவரும். 

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/2/14/minsara_kanna1.jpg

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!