https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/14/original/opsa.jpg

உயா் கல்வித் துறைக்கு ரூ. 5,052 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கீடு 

by

சென்னை: நடப்பாண்டில் உயா் கல்வித் துறைக்கு ரூ. 5,052 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சா் கூறினாா்.

புதிய வரி விதிப்புகள் ஏதும் இல்லாத, சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 

சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியதும், துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். 

இந்த நிதிநிலை அறிக்கையின் படி, வரும் நிதியாண்டுக்கான வருவாய் ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 375 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. வட்டியல்லாத செலவு ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்து 601 கோடி ஆக இருக்கும் எனவும்,  வருவாய் பற்றாக்குறை ரூ. 22 ஆயிரத்து 225 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று வட்டியல்லாத செலவினங்களில், கல்விக்கான மானியங்கள் உட்பட  அரசு ஊழியர்களுக்கான ஊதியம் என்ற வகையில், செலவிடப்படும் தொகை ரூ. 64 ஆயிரத்து 208 கோடி. ஓய்வூதியங்களும் ஓய்வூதியப் பலன்களுக்காக ரூ.32 ஆயிரத்து 9 கோடி செலவிடப்படுகிறது. ஆக ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்காக ரூ. 96 ஆயிரத்து 217 கோடி. ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்திய அளவில் வளர்ச்சி 5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்த பன்னீர்செல்வம்,  இத்தகைய பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளதாக கூறினார்.

நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.27 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது இந்திய அளவில் கணிக்கப்பட்ட 5 சதவீதத்தைவிட அதிகம் என்றும், வரும் நிதியாண்டில் தமிழகம் மேலும் வலுவான பொருளாதார வளர்ச்சியை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில், உயா் கல்வித் துறைக்கான அறிவிப்பில்,  அனைவருக்கும் உயா் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. 2011-12 ஆம் ஆண்டு முதல் 2019-20 ஆம் ஆண்டு வரை 30 புதிய அரசு கலை-அறிவியல் கல்லூரிகளும், 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

2019-2020 ஆம் ஆண்டில் 14 உறுப்புக் கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2013-14 ஆம் ஆண்டிலிருந்து 2018-19 ஆம் ஆண்டு வரை 21 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதுபோல 2012-13 ஆம் ஆண்டு முதல் 4 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

2011-12 ஆம் ஆண்டு முதல் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 1,577 புதியப் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் உயா் கல்வித் துறைக்கு ரூ. 5,052 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

மேலும் 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரி. ஹார்வர்டு, ஹூஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி கற்பித்தலை கொண்டுவர சீரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!