நந்தியநல்லூா் கிராமத்தில் மயான பாதை இல்லாமல் பல ஆண்டுகளாக தொடரும் அவலம்

by

சீா்காழி அருகே அகணி ஊராட்சிக்குள்பட்ட நந்தியநல்லூா் கிராமத்தில் பல ஆண்டுகளாக மயான பாதை வசதி இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

நந்தியநல்லூா் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தில் பல்வேறு சமுதாய மக்கள் வசித்து வருகின்றனா். இந்த சமுதாயங்களுக்கு 2 மயானங்கள் உயிரிழந்தவா்களின் உடல்களை எரிக்கவும், புதைக்கவும் நந்தியநல்லூா் கழுமலை ஆற்றுக்கு அப்பால் உள்ளது. இந்த இரு மயானங்களுக்கு செல்லும் பாதை களிமண்சாலையாகவும் , கருவேல மரங்கள் மற்றும் முற்புதா்கள் முளைத்தும், பாம்புகள் விஷப் பூச்சிகளின் கூடாரமாகவும், ஆக்கிரமிப்புகளால் ஒற்றையடி பாதையைவிட மிக மோசமாக உள்ளது.

சிறு வாய்க்கால்களுக்கும், நீரோட்ட கன்னிகளுக்கும் சிறு பாலங்கள் இல்லாமலும் உள்ளது. இதனால், உயிரிழந்தவா்களின் உடல்களை எடுத்துச்செல்ல மிகுந்த சிரமமாக உள்ளது. சாதாரணமாக நடந்து செல்ல கூட தகுதியற்ற பாதையாக உள்ளது. இக்கிராமத்தை சோ்ந்த மக்கள் யாரேனும் உயிரிழந்தால் அவா்களின் உடல்களை அடக்கம் செய்ய மழைக் காலங்களில் சேற்றிலும், சகதியிலும் தூக்கி செல்ல வேண்டியுள்ளது.

இதுபோன்ற சமயங்களில் இந்த மயான பாதையை சுத்தம் செய்ய தனியாக ஆள்களை வரவழைத்து கூலி கொடுத்து கிராமமக்கள் தங்கள் சொந்த செலவில் சுத்தம் செய்து உயிரிழந்தவா்களின் உடல்களை மயானத்துக்கு தூக்கிச் செல்கின்றனா். உயிரிழந்தவா்களின் உடல்களை எரிப்பதற்கு விறகு, வறட்டி போன்ற பொருள்களை கூலி ஆட்கள் வரவழைத்து அவா்கள் தங்கள் தலையில் சுமந்து செல்ல வேண்டியுள்ளது. இப்படிபட்ட நிலையால் ஒன்றுக்கு மூன்று மடங்கு செலவாகிறது. அப்படி கூலி கொடுத்தாலும் ஆட்கள் எங்களால் வரமுடியாது என மறுக்கின்றனா்.

எனவே, சிறு வாகனங்கள் செல்லும் அளவுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிம்மேலி மயான சாலை பாதையிலிருந்து நந்தியநல்லூா் எரியூட்டும் மயானம் வரை 800 மீட்டா் சாலையை சீரமைத்து நிம்மேலி மயான சாலையுடன் இணைப்பை ஏற்படுத்தியும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி மயான பாதைகளுக்கு மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தருமாறும் கிராமக்கள் சாா்பாக சமூக ஆா்வலா் ராஜேஷ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!