https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/14/original/ahmedabad.jpg

டிரம்ப் வருகை: ஆமதாபாத்தில் குடிசைகளை மறைக்க கட்டப்படும் சுற்றுச் சுவர்

by

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகையை முன்னிட்டு ஆமதாபாத்தில் குடிசைகளை மறைக்கும் வகையில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 24ம் தேதி டொனால்ட் டிரம்ப் இந்தியா வருகிறார். அவர் இந்திய வருகையின் போது ஆமதாபாத்துக்கும் பயணம் செய்ய உள்ளார். அப்போது, சாலை வழியாக பிரதமர் நரேந்திர மோடி, டொனால்ட் டிரம்பை ஆமதாபாத்தின் சில பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திரா பாலம் - சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் சாலையின் பக்கவாட்டில் இருக்கும் மிகப்பெரிய குடிசைப் பகுதியை மறைக்கும் வகையில், சாலையோரமாக மிகப்பெரிய சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஆமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதன் மூலம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோரது பார்வையில் படாமல் இந்த குடிசைப் பகுதிகளை மறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக 600 மீட்டருக்கு சுமார் 6 - 7 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது. தேவ் சரண் அல்லது சரணியவாஸ் என அழைக்கப்படும் இந்த குடிசைப் பகுதியில்தான் சுமார் 500 குடிசைகளில் 2,500 மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இது ஏதோ முதல்முறை என்று நினைக்க வேண்டாம், முன்னதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே ஆமதாபாத் வந்த போதும், இந்த குடிசைப் பகுதியை மிகப்பெரிய துணியால் சுற்றுச்சுவர் போல மூடப்பட்டிருந்ததாக குடிசைப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!