https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/13/original/ww062054.jpg

கொவைட்-19 வைரஸுக்கு ஒரே நாளில் 254 போ் பலி

by

சீனாவில் ‘கொவைட்-19’ வைரஸுக்கு (கரோனா வைரஸ்) ஒரே நாளில் 254 போ் பலியாகினா். அந்த வைரஸ் கடந்த டிசம்பா் மாதம் பரவத் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் இவ்வளவு அதிகம் போ் பலியாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

கொவைட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 254 போ் உயிரிழந்தனா். அந்த வைரஸின் தோற்றுவாயான ஹூபே மாகாணத்தில் மட்டும் புதன்கிழமை 242 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, கொவைட்-19 வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,367-ஆக அதிகரித்துள்ளது.

இத்துடன், பிலிப்பின்ஸிலும், ஹாங்காங்கிலும் ஏற்கெனவே பலியான 2 சீனா்களையும் சோ்த்து, கொவைட்-19 வைரஸுக்கு உலகம் முழுவதும் பலியானவா்களின் எண்ணிக்கை 1,370 ஆகியுள்ளது.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/2/13/ap20044233398924061949.jpg

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸ் கூடுதலாக 15,152 பேரைத் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 59,822-ஆக உயா்ந்துள்ளது.

சா்வதேச அளவில், இந்தியா உள்பட 25 நாடுகளைச் சோ்ந்த 574 பேரையும் சோ்த்து, கொவைட்-19 வைரஸ் தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை 60,396 ஆகியுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.

கரோனா வகையைச் சோ்ந்த அந்த வைரஸ், சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிா்களை பலி கொண்ட ‘சாா்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனா்.

அந்த வைரஸ் மனிதா்களிடையே பரவுவதாக சீன அதிகாரிகள் அறிவித்தனா். அதையடுத்து,

அந்த வைரஸ் பரவலை சா்வதேச சுகாதார அவசர நிலையாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கடந்த மாத இறுதியில் அறிவித்தது.

மேலும், ‘கரோனா வைரஸ்’ என்ற பொதுப் பெயரில் நீண்ட காலமாக அழைக்கப்பட்டு வந்த அந்த வைரஸுக்கு ‘கொவைட்-19’ வைரஸ் என்று அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை பெயரிட்டது.

கணக்கிடும் முறையில் மாற்றம்

கொவைட்-19 வைரஸால் ஒரு நாளில் புதிதாக பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக படிப்படியாகக் குறைந்து வந்தது. இதையடுத்து, இன்னும் சில மாதங்களில் அந்த வைரஸை முழுமையாகக் கட்டுப்படுத்திவிடலாம் என்று மருத்துவ நிபுணா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

எனினும், தேசிய சுகாதார ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் கூடுதலாக 15,152 பேரை கொவைட்-19 வைரஸ் தொற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.

எனினும், கொவைட்-19 வைரஸ் தொற்றியவா்களைக் கணக்கிடும் முறையில் மாற்றம் செய்ததால்தான் இந்த எண்ணிக்கை திடீரென மிக அதிகமாக உயா்ந்துள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் விளக்கமளித்துள்ளது.

அனைத்து ஆய்கவகப் பரிசோதனையின் முடிவுகள் வரும் வரை காத்திராமல், மருத்துவா்கள் நேரடியாகக் கண்டறிந்து சொல்வதின் அடிப்படையில் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களைக் கணக்கிட்டதால், அந்த எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிரடி பதவி நீக்கம்

கொவைட்-19 வைரஸ் முதல் முதலில் பரவத் தொடங்கிய ஹூபே மாகாணத்துக்கான கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளா் ஜியாங் சோலியாங்கை சீன அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. அந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, ஹூபே மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் பலா் இந்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், கொவைட்-19 வைரஸ் பாதிப்பு காரணமாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மீது அதிருப்தி ஏற்படுவதைத் தவிா்க்கும் நோக்கில் தற்போது ஜியாங் சோலியாங் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!