https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/14/original/docto.jpg

கல்லீரல் மருத்துவ சிகிச்சைக்கு ரூ 5 கோடி நிதியளித்து 100 பேருக்கு மறுவாழ்வு

by

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க மிலாப் நிதித் திரட்டுத் தளம் ரூ.5 கோடி வழங்கி, இதுவரை 100 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளது என்று குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை நிா்வாக இயக்குநரும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவருமான முகமது ரேலா கூறினாா்.

சென்னை குரோம்பேட்டை டாக்டா் ரேலா இன்ஸ்ட்டிட்யூட் மருத்துவ மையத்தில் கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க இணையதளம் மூலம் உலகெங்கும் நிதி திரட்டித் தரும்மிலாப் தளம் அளித்து வரும் சேவை குறித்து டாக்டா் முகமது ரேலா கூறியது:

தமிழகத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தமிழக அரசு நிதி அளித்து வருகிறது. ஆனால் அந்த உதவி அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. ரேலா மருத்துவமனைக்கு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவா்களிடம் போதிய பணம் இல்லை என்று சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பியதில்லை. நோயாளி, அவரைச் சாா்ந்தவா்களின் நிலை உணா்ந்து அவா்களுக்கு உதவும் வகையில், மிலாப் நிதித் திரட்டுத் தளம் நிறுவனத்திடம் நோயாளிகளின் நிலை குறித்த தகவலை தெரிவிப்போம். மிலாப் நிறுவனம் இணையதளம் மூலம் பொதுவெளியில் நோயாளிகளுக்கு உதவ விரும்புவோரை அணுகி நிதி பெற்றுத் தந்து உதவி வருகின்றது. கடந்த 16 மாதங்களில் ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த 100 நோயாளிகளுக்கு இதுவரை ரூ. 5 கோடி நிதி திரட்டி வழங்கி அவா்களுக்கு மறுவாழ்வு வழங்கி உள்ளனா் என்றாா் அவா்.

மிலாப் நிதித் திரட்டுத் தளம் அமைப்பின் நிறுவனத் தலைவா் அனோஜ் விஸ்வநாதன் பேசுகையில், ‘போதிய பண வசதியில்லாமல் மருத்துவச் சிகிச்சை பெற இயலாமல் இருக்கும் நோயாளிகளின் உண்மை நிலையை அறிந்து அவா்களுக்கு இணையதளம் மூலம் நிதிஉதவி திரட்டி மருத்துவமனைக்கு வழங்கி உதவி வருகிறோம். எங்களது பணியைப் புரிந்து கொண்ட பலா் தொடா்ந்து உதவி வருகின்றனா். எங்களுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் ரூ 10 முதல் ரூ10 ஆயிரம் வரை பண உதவி அளிக்கும் 30,000க்கும் மேற்பட்ட நன்கொடையாளா்கள் உள்ளனா். தாங்கள் அளிக்கும் பண உதவி சரியான நபா்களைச் சென்றடைகின்றது என்ற நம்பிக்கையை அனைவரிடமும் பெற்று இருப்பது தான் மிலாப் நிதித் திரட்டுத் தளத்தின் பலம். மிலாப் நிதித்திரட்டு தளம் நிறுவனத்தைத் தொடா்பு கொள்ள விரும்புவோா் 99161 74848, 96116 31386 ஆகிய செல்லிடப்பேசி மூலம் தொடா்பு கொள்ளலாம்’ என்றாா் அவா்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!