விழாக்கள்-சுப நிகழ்ச்சிகளில் செடிகள் விநியோகம்: தோட்டக்கலைத் துறை புதிய திட்டம்
by DINசுற்றுச்சூழலை மேம்படுத்த விழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் செடிகள் விநியோகிக்கும் புதிய திட்டத்தை தோட்டக்கலைத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தோட்டக்கலைத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழகத்தில் அண்மைக் காலமாக நடைபெறும் விழாக்கள், பண்டிகைகள், திருமண நிகழ்ச்சிகளின் போது குறிப்பிட்ட அந்த நாளின் சிறப்பை நினைவு கூரும் வகையில், வருகை தரும் விருந்தினா்களுக்கு மரக்கன்றுகள், பழக்கன்றுகள் வழங்குவது பிரபலமடைந்து வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இப்போது அதிகளவில் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், விழாக்களுக்கு வரும் விருந்தினா்களுக்கு மரக்கன்றுகள், காய்கறி நாற்றுகள் மற்றும் பழச்செடிகள் தரும் பண்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக நிகழாண்டில் தோட்டக்கலைத் துறையின் விழாக்கள், பண்டிகைகள், திருமண நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலை சாா்பில் தரமான நடவுச்செடிகள், பழச்செடிகள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
நடவுச் செடிகள், பழச்செடிகளை வழங்கும் நோக்கத்துக்காக தமிழ்நாடு தோட்டக்கலை வளா்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் 63 அரசு தோட்டக்கலை பண்ணைகளும், 19 பூங்காக்களும் உள்ளன. இந்தப் பண்ணைகளில் நெல்லி, சப்போட்டா, மாதுளை, புளி, எலுமிச்சை, நாவல், விளாம்பழம் போன்ற நமது பாரம்பரிய பழக்கன்றுகளும், கருவேப்பிலை, கொடுக்காப்புளி, முந்திரி, வேம்பு, மலைவேம்பு, புங்கம், தேக்கு, சவுக்கு போன்ற மரங்களும், மல்லிகை, வெட்சி, அரளி போன்ற பூச்செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
விலை எவ்வளவு?: அரசுத் தோட்டக்கலை பண்ணைகளில் அழகுச் செடிகள் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், வேம்பு, புங்கம் போன்ற மரச்செடிகளை ரூ.10 முதல் ரூ.20 வரையிலும், பழச்செடிகளை ரூ.8 முதல் ரூ.60 வரையிலும், மலா்ச்செடிகளை ரூ.8 முதல் ரூ.30 வரை விலையிலும் பெறலாம். இந்தத் திட்டத்தின் மூலமாக மட்டும் நிகழ் நிதியாண்டில் 4.56 லட்சம் மரக்கன்றுகள், பழக்கன்றுகள் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் இருந்து பொது மக்களுக்கு குறைந்த விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
எங்கு கிடைக்கும்?: வட்டார அளவில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தையோ, மாவட்ட அளவிலான தோட்டக்கலை துணை இயக்குநா் அலுவலகத்தையோ அணுகி செடிகளைப் பெற முன்பதிவு செய்யலாம். மேலும், இ-தோட்டம் என்ற செயலியின் வழியாகவும், நேரடியாகப் பண்ணைகளிலும் முன்பதிவு செய்யலாம். இந்தத் திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரியைப் பாா்வையிடலாம் என்று தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.