இறுதி தீர்மானத்திற்கு கூடிய ஐக்கிய தேசிய கட்சி!

உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பில் இறுதி தீர்மானம் ஒன்றை எட்டுவதன் நோக்குடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பினர் மற்றும் சஜித் பிரேமதாச தரப்பினருக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இன்று (14) பிற்பகல் 02.30 க்கு இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (14) முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.

´சமகி ஜனபல வேகய´ என்ற பெயரில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் கீழ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக இந்த கலந்துரையாடலின் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், இன்றைய தினம் இறுதி கலந்துரையாடல் ஒன்று ரணில் தரப்பினரில் 5 உறுப்பினர்கள் மற்றும் சஜித் தரப்பினரில் 5 உறுப்பினர்களின் பங்கேற்பில் இடம்பெற்றதாக தெரிவித்தார்.

இதன்போது, எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், மிக விரைவில் மக்களை அணுக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.