http://img.dinakaran.com/Healthnew/H_image/ht445170292152952.jpg

டியர் டாக்டர்

நன்றி குங்குமம் டாக்டர்

* ஆண்டாண்டு காலமாக நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வந்தது மத்திய திட்டக்குழு. அதற்கு சமாதிகட்டிவிட்டு, அரசின் அடிப்படைக்கட்டமைப்பு வசதிகள் கொண்ட நலத்திட்டங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கென்றே உருவாக்கப்பட்டதுதான் நிதி ஆயோக். இது மக்கள் விரோத ஆலோசனைகளில் ஒன்றான அரசு மருத்துவமனைகளைத் தனியாருக்குக் கைமாற்றும் கொடுமையினை டாக்டர் புகழேந்தி நெத்தியடியாகக் குறிப்பிட்டிருந்தார். அரசு மருத்துவமனைகளை மருத்துவக்கல்லூரிகளாக்கிட மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்ற கட்டுரையாளரின் கோரிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் தர வேண்டும்.

- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

* க்ரைம் டைரி, மகளிர் மட்டும், கன்சல்டிங் ரூம் போன்ற கட்டுரைகள் நல்ல கருத்துக்களை எடுத்துச்சொல்லி விளக்கியும் இருந்தது. சைனஸ் பற்றிய கட்டுரை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரியும் இருந்தது. கண்டகண்ட செடிகளை அழகுக்காக வீட்டில் வளர்க்கும் பலருக்கு மூலிகைச் செடிகள் வளர்ப்பது நல்லது என்று சேவை எண்ணத்தோடு சொல்லிய கருத்துக்கள் உண்மையிலேயே ஸ்பெஷல்தான்.

- சிம்மவாஹினி, வியாசர்பாடி.

*‘குடம்புளியின் மகத்துவம் உண்மையிலேயே உங்கள் புத்தகத்தை படித்துதான் தெரிந்துகொண்டேன். பாட்டி வைத்தியத்தில் ‘சுண்டைக்காய்’ பற்றிய தகவல்களைப் பார்த்து, இனி கசக்கும் இந்தக் காயை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

- தேவி, ஆழ்வார்பேட்டை.


* நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்னதுபோல் நாம் ஏற்கனவே கல்விக்கும் மருத்துவத்திற்கும் அதிகம் செலவழிக்கிறோம். இதில் அரசு மருத்துவமனைகளை தனியார்க்கு தாரை வார்க்கும் திட்டம், முதலுக்கே மோசம் வரும் போலிருக்கிறது. அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

- செ.ரா.ரவி, செம்பட்டி- 624707.

*‘சரக்’கால் போதை தற்காலிகமாக வருவதோடு, நிரந்தரமாகப் பார்வையும் பறிபோகும் என்ற கட்டுரை படித்து பலரும் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். அதிர்ச்சி அடைவதோடு நிறுத்திவிடாமல், இனியாவது டாஸ்மாக் தலைமுறையினர் திருந்துவார்களா?!

- சி.கோபாலகிருஷ்ணன், கிழக்கு தாம்பரம். 
 

* ‘பெண்களின் உடல்பருமனுக்’கான காரணங்களில் ஹார்மோன் பிரச்னைகள் எந்த அளவிற்கு உடல்பருமனுக்கு காரணமாகிறது என்பது எல்லோரும் தெளிவு பெற வேண்டிய ஒரு விஷயம்.

- லலிதா, சிதம்பரம்.