http://img.dinakaran.com/Healthnew/H_image/ht445170292152953.jpg

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப்பட்டாணி

நன்றி குங்குமம் டாக்டர்

"நாம் அன்றாடம் உண்ணும் ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு தனித்தன்மையான பலனை உள்ளடக்கியுள்ளது. அந்த வகையில் பச்சைப்பட்டாணியும் நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை நிறைவாகப் பெற்றுள்ளது" என்ற ஊட்டச்சத்து நிபுணர் திவ்யாவிடம் பட்டாணி பற்றியும் அதன் மருத்துவ சிறப்புகள் பற்றியும் கேட்டோம்... உருளை வடிவில் இருக்கும் பருப்பு வகையைச் சேர்ந்தது பட்டாணி. இதன் அறிவியல் பெயர் Pisum sativum. இவை செடியில் பார்ப்பதற்கு அவரைக்காய் போன்ற தோற்றத்தில் இருக்கும். இவை பச்சை நிறத்தில் இருப்பதால் பச்சைப்பட்டாணி (Green peas) என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது. காய்ந்த பின் இவை வெளிர் பச்சை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.

பீன்ஸ் போன்று இருக்கும் பட்டாணியை வாங்கி அதை பிரித்தெடுத்து பயன்படுத்துவதோ அல்லது இதுபோன்ற ரசாயனம் கலக்காத தரமான பட்டாணியை பயன்
படுத்துவதோ நம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதுபோன்ற ரசாயனம் கலக்கப்பட்ட பட்டாணியை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். கைகளால் அழுத்திப் பார்த்தால் பச்சை நிறம் கைகளில் ஒட்டும் அல்லது ஒரு டம்ளரில் தண்ணீரை ஊற்றி அதில் சிறிதளவு பட்டாணியைப் போடுங்கள். சிறிது நேரத்தில் அதிலிருந்து பச்சை நிறம் பிரிந்து தண்ணீரில் மிதப்பதைப் பார்க்க முடியும். எனவே நுகர்வோராகிய நாம் விழிப்புணர்வோடு இருந்தால், கலப்படம் இல்லாத தரமான பட்டாணி மட்டுமின்றி பிற பச்சைக் காய்கறிகளையும் நாம் பயன்படுத்தி அதிலுள்ள ஊட்டச்சத்துக்களை நாம் முழுமையாக பெற முடியும்.

பச்சைப்பட்டாணியில் குறைவான கலோரியும், அதிக அளவு நார்ச்சத்தும், புரதமும் உள்ளது. இந்த நார்ச்சத்தும், புரதமும் நமக்கு வயிறு நிறைந்த திருப்தியைக் கொடுப்பதால் இவை பசியைப் போக்கவும், உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவுகிறது. இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவை அதிகரிக்கச் செய்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் ஜீரண சக்திக்கு உதவுகிறது. பட்டாணியின் பச்சை நிறத்திற்காக வியாபார நோக்கில் சிலர் Malachite Green என்கிற நிறமூட்டியைப் பயன்படுத்துகின்றனர். பட்டாணி மட்டுமின்றி மேலும் பல பச்சைக் காய்கறிகளின் பளீரென்ற பச்சை நிறத் தோற்றத்துக்காகவும் இந்த ரசாயனப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனம் தோல், பட்டு, காகிதம் போன்ற பொருட்களுக்கு சாயமேற்றுவதில் பயன்படுத்தப்படுகிற ஒன்றாக உள்ளது. இந்த ரசாயனத்தால் கல்லீரல் கட்டிகள், கல்லீரல் புற்றுநோய் என்று கல்லீரல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்கின்றன ஆய்வுகள்.

ஒரு கப் பச்சைப்பட்டாணியில் ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் கே 44 சதவிகிதம் உள்ளது. இச்சத்து எலும்பு மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. இதில் உள்ள பாலிஃபினால் என்ற வேதிப்பொருள் வயிற்றுப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இதில் இரும்பு, கால்சியம், காப்பர், மாங்கனீஸ் போன்ற தாதுப்பொருட்கள் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. பச்சைப்பட்டாணியை இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் பிரச்னை உடையவர்கள் உள்ளிட்ட அனைவரும் உட்கொள்ளலாம். இவை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருடைய உடல் ஆரோக்கியத்திற்கும் தேவையான பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.

பச்சைப்பட்டாணியை குறைவான தண்ணீரில் வேக வைத்து பிற காய்கறிகளோடு சேர்த்து சாலட் போல உண்ணலாம். இதை குழம்பு, பொரியல், குருமா, சாதம் ஆகிய பல உணவுகளோடும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். காய்ந்த பட்டாணியை நீண்டநாள் உபயோகப்படுத்தலாம். இதை ஊற வைத்து பச்சைப்பட்டாணியில் செய்கிற அதே முறைகளில் செய்து அத்தனை சத்துக்களையும் நாம் பெறலாம்.

தொகுப்பு: க.கதிரவன்