http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__737682521343232.jpg

கடந்த 19 ஆண்டுகளில் பள்ளி மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் குற்றங்கள் பதிவு: பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் புள்ளி விவரங்களை அளித்து விளக்கம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 19 ஆண்டுகளில் பள்ளி மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் வன்முறை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் புள்ளி விவரங்களை அளித்து விளக்கமளித்துள்ளனர். இந்த குற்றங்கள் அனைத்தும் மாநில தகவல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முருகேசன் என்பவர் தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் அதன் ஆணையர் முத்துராஜ் முன்னிலையில் நடந்தது. இதில் பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளும், தனியார் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அப்போது கடந்த 19 ஆண்டுகளில் பள்ளி மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் குற்றங்கள் நடந்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் புள்ளி விவரங்களை அளித்துள்ளனர். இதனை அடுத்து மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் நோக்கில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியரின் விவரத்தை கல்வித் தகவல் இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி இருக்கின்றனர். அப்போது தான் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும் எனவும், குற்றவாளி ஆசிரியர்கள் வேறு பள்ளியில் சேராத வகையில் தடுக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.