கைது செய்யப்பட்ட உதயங்க வீரதுங்க விளக்கமறியலில்

by

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட் உதயங்க வீரதுங்க இன்று பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதனைடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலை இலங்கை திரும்பிய உதயங்க வீரதுங்க, மிக் விமான கொள்வனவில் நடந்த நிதி மோசடி சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைய குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது ரஸ்யாவில் தூதுவராக இருந்த வேளையில் உதயங்க வீரதுங்க மிக் ரக விமானக் கொள்வனவின் போது பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டார் என்றும் பணச்சலவையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தின்போது அவரை நாட்டுக்கு அழைத்து வர முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை. இதன்பின்னர் யுக்ரெய்னில் சில காலம் தங்கியிருந்த அவர் பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்தார்.

எனினும் இலங்கைக்கும் ஐக்கிய அரபு ராச்சியத்துக்கும் இடையில் கைதி பரிமாற்ற உடன்பாடு இல்லாமை காரணமாக அவரை இலங்கை அரசாங்கத்தினால் நாடு கடத்துமாறு கோர முடியவில்லை.

இந்தநிலையிலேயே அவர் இன்று அதிகாலை மஸ்கட்டில் இருந்து வந்த விமானத்தில் இலங்கை வந்துள்ளார்.