இலங்கையின் செய்தித்தாள் சட்டம் தொடர்பில் சர்வதேச சம்மேளனம் அதிருப்தி

by

சர்வதேச செய்தித்தாள்களின் சம்மேளனம் இலங்கையின் செய்தித்தாள் சபை( பத்திரிகை சபை) யின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

சர்வதேச செய்தித்தாள் சம்மேளனத்தின் தலைவர் வின்சன்ட் பேரிஜின் இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், இலங்கையில் கோட்டாபய ராஜபக்ச மக்களின் அதிக ஆணையை பெற்று ஜனாதிபதியாக தெரிவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஜனாதிபதி செய்தியாளர்களுடன் நடத்திய பல்வேறு சந்திப்புக்களின் போது ஊடகங்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இருக்காது என்றும் யாரும் சுதந்திரமாக எழுதலாம் என்று குறிப்பிட்டு வருகிறார்.

இதனை 3000 ஊடக நிறுவனங்களை தம்வசம் கொண்டு சர்வதேச செய்தித்தாள் சம்மேளனம் வரவேற்பதாக குறிப்பிட்டுள்ள அதன் தலைவர் வின்சன்ட் பேரிஜின் இலங்கையின் அரசியலமைப்பிலும் சுதந்திர ஊடகத்துக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை உலகின் ஜனநாயக நாடுகள் பலவும் சுய ஒழுங்கங்களின் கட்டுப்பாட்டு அடிப்படையில் செயற்படுவதற்கு ஊடகங்களுக்கு அனுமதியை வழங்கியுள்ளன.

எனினும் இலங்கையின் செய்தித்தாள் சபை சட்டத்தின் கீழ் வெளியீட்டாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறை என்ற வசனம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது வரவேற்கத்தக்க விடயம் அல்ல. எனவே கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் சுயஒழுங்கு கொள்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும், என்று சர்வதேச செய்தித்தாள் சம்மேளன தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.