இலங்கையின் இடைக்கால நீதிப்பொறிமுறைக்கு வெளியக காலவரையறைகள் பொருந்தாது!

by

இலங்கையில் போருக்கு பின்னர் இடைக்கால நீதிமுறையை காண்பதற்கு வெளியக காலவரையறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அறிவித்துள்ளது.

சுமாதான கட்டியெழுப்பல் மற்றும் நிலையான சமாதானம் என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி சேனுகா செனவிரட்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.

காலவரையறையை செயற்படுத்துவதற்கு வெளியில் இருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும்போது அது நல்லிணக்கத்துக்கு இடையூறை ஏற்படுத்தும். அத்துடன் யதார்த்தங்களை இழந்து விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இடைக்கால நீதிமுறைக்கான பொறிமுறையை தேடும்போது அதனுடன் தொடர்புடைய வரலாறுகள், கலாசார மற்றும் மத உணர்திறன் என்பவற்றை அறிந்துக்கொள்ளல் அவசியமானது என்றும் சேனுகா செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகளில் தமது செயற்பாடுகளை கொண்டிருந்த பயங்கரவாத அமைப்புடன் போரிட்ட இலங்கையின் படையினரின் செயற்பாடுகளை இரக்கமற்றது என்று சிலர் விமர்ச்சித்தாலும் அது ஒரு சமூகத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இலக்குகளின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத குழுவின் செயற்பாடுகளை அண்மைக்காலங்களில் உலகில் ஏனைய நாடுகளிலும் சில குழுக்கள் பின்பற்றுவதை காணமுடிகிறது.

அமைதியான, நீதியான,நல்லிணக்கமான சமுதாயத்தை மேம்படுத்தும்போது நிலையான அனைத்தையும் உள்ளடக்க வேண்டும்;

இலங்கையில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த மற்றவர்களிடம் இருந்து படிப்பினைகளை கற்றுக்கொள்ள முடியும்.

எனினும் இலங்கையில் நல்லிணக்கத்துக்கான பாதை இலங்கைக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த விவாதத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்ச்சித்து வரும் மனித உரிமைகளுக்கான முன்னணி சட்டத்தரணியான யஸ்மின் சூக்காவும் பங்கேற்றார்.