https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/14/original/chinnaswamy7171.jpg

ஒவ்வொரு இந்தியனும் ஹிந்தி மொழியை அறிந்திருக்க வேண்டும்: ரஞ்சி வர்ணனையாளர்களுக்கு ரசிகர்கள் கண்டனம்

by

பெங்களூரில் கர்நாடகம் - பரோடா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த ஆட்டத்துக்கான ஹாட்ஸ்டார் ஹிந்தி வர்ணனையில் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ரஜிந்தர் அமர்நாத், சுஷில் தோஷி ஆகிய இரு ஹிந்தி வர்ணனையாளர்களும் முன்னாள் வீரர் கவாஸ்கர் ஹிந்தி வர்ணனையில் ஈடுபடுவது குறித்துப் பேசியபோது ஹிந்தி கற்பது குறித்தும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். அதுதான் ரசிகர்களின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.

ஹரியாணாவின் முன்னாள் வீரரும் மொஹிந்தர் அமர்நாத்தின் சகோதரருமான ரஜிந்தர், இந்தியாவில் ஒவ்வொரு இந்தியனும் ஹிந்தியை அறிந்திருக்கவேண்டும். இது நம் தாய் மொழி. நமக்கு இதைவிட இன்னொரு சிறந்த மொழி கிடையாது என்றார்.

மூத்த வர்ணனையாளரான சுஷில் தோஷி அதற்குக் கூறியதாவது: வீரர்கள் ஹிந்தியில் பேசுவதைப் பெருமையாக எண்ணவேண்டும். நீங்கள் இந்தியாவில் வாழும்போது இந்தியாவின் மொழியைப் பேசவேண்டும் என்றார். 

இதன் விடியோ சமூகவலைத்தளத்தில் வெளியானதையடுத்து, வர்ணனையாளரின் பேச்சுகளுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். இருவரையும் வர்ணனையாளர் பணியிலிருந்து பிசிசிஐ நீக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.

இதையடுத்து வர்ணனையில் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் ரஜிந்தர். ஒரு மொழியைத் திணிக்கவேண்டும் என்பது நோக்கமல்ல. நம் நாட்டின் அனைத்து மொழிகளும் நாட்டின் அங்கமாகும். எல்லோரும் அவரவர் மொழியைப் பேச விருப்பப்படுகிறார்கள். யாரையும் காயப்படுத்தவேண்டும் என்பது என் நோக்கமல்ல என்று கூறினார். 

நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு வர்ணனையாளர்கள் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்கள். ஹிந்தியைக் கட்டாயமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்குப் பதிலாக ஹிந்தியை அறிந்துகொள்ளலாம் என்று தான் சொல்ல விரும்பினேன். இதற்குச் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் ரஜிந்தர். 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!