http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__190410792827607.jpg

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தேவையில்லை: திமுக எம்.பி. தயாநிதிமாறன் பேச்சு

வேலூர்: இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பே நடத்த தேவையில்லை என்றும், அதனால் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பணம் வீணாகிறது என திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் தனியார் பெண்கள் கல்லூரியில் ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தயாநிதிமாறன் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைவரிடமும் உள்ள ஆதார் தகவலை பயன்படுத்தி கொள்ளாமல் தேவையில்லாமல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக கூறினார்.  

மக்கள் தொகை கணக்கெடுப்பு:

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதன்படி, கடைசியாக 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்தது. இதையடுத்து 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடக்கிறது. தமிழகத்தில் கோடை காலம் முடிந்த பின்னர் ஜூன் 1ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 15ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பே நடத்த தேவையில்லை என்றும், அதனால் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பணம் வீணாகிறது எனவும் திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.