
அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம்: ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கக் கோரும் வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்
புதுடெல்லி: ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கக் கோரும் வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017ம் ஆண்டு பதவியேற்றதும் பிப்ரவரி 18ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது, அவர் மீது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாபா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்நிலையில் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால் அதுகுறித்த எந்தவித நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை. இதையடுத்து திமுக தரப்பில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் உத்தரவே இறுதியானது எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக திமுக சட்டசபை கொறடா சக்கரபாணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த மேற்கண்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் கடந்த 4ம் தேதியன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 11 எம்எல்ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில், கடந்த 3 ஆண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சபாநாயகர் காலதாமதம் செய்து வருவது ஏன் என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. மேலும், இந்த விவகாரத்தில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 14ம்(இன்று) தேதிக்கு ஒத்திவைத்தது.
அதன்படி, இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வதி பற்றி சபாநாயகரே முடிவெடுக்கலாம், என தெரிவித்துள்ளது. மேலும், இவ்விகாரத்தில் முடிவெடுக்க சபாநாயகருக்கு கால அவகாசம் எதுவும் விதிக்க முடியாது என கூறிய நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
பன்னீர் பதவி தப்பியது?
ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யும் முடிவை சபாநாயகர் தீர்மானிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்ததால் 11 எம்.எல்.ஏ பதவிக்கு ஆபத்து இல்லை என்றும், கொறடா உத்தரவை மீறி வாக்களித்து 3 ஆண்டுகளாகியும் சபாநாயகர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் சபாநாயகர் நடவடிக்கை எடுப்பாறா என்பது சந்தேகம் தான் எனவும் அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.