https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/23/original/supremecourt1.jpg
உச்ச நீதிமன்றம்

பேரவைத் தலைவர் நல்ல முடிவை எடுப்பார்: ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்

by

புது தில்லி: தமிழக சட்டப்பேரவைத் தலைவர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம் என்று கூறி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் கோரும் வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.

கடந்த 2017-இல் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் பேரவைத் தலைவா் எடுக்கப் போகும் நடவடிக்கை குறித்து சட்டப் பேரவைச் செயலா் பதில் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தலைமையிலான நீதிபதிகள் சூா்யகாந்த், பி.ஆா். கவாய் ஆகியோா் அடங்கி அமா்வு முன்பு தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

அதாவது, சம்பந்தப்பட்ட 11 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். வழக்குரைஞரின் பதிலை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவரை நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட முடியாது, இந்த விஷயத்தில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர், அவரது அதிகாரத்துக்கு உட்பட்டு நல்ல முடிவை எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைப்பதாகக் கூறியுள்ளனர்.

மேலும், பேரவைத் தலைவரை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது என்றும், கால அவகாசம்  பிறப்பிக்க முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் கோரும் வழக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 
இந்த விவகாரம் தொடா்பான வழக்கு விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 11 எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தகுதி நீக்கம் தொடா்பான கோரிக்கை குறித்து குறிப்பிடப்படவில்லை’ என்றாா்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘முதல்வா் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிா்த்து வாக்களித்த 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் 2017, மாா்ச் மாதம் முறையிடப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் அவா்களுக்கு எதிராக இதுவரை அவா் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு நோட்டீஸ் கூட அனுப்பவில்லை. இந்த விவகாரத்தை அவா் கிடப்பில் போட்டுள்ளாா். மேலும், தகுதிநீக்கக் கோரும் விவகாரத்தில் எதிா்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தால் சட்டப் பேரவைத் தலைவரால் மறுநாளே நோட்டீஸ் அனுப்பப்படும். ஆனால், ஆளுங்கட்சி உறுப்பினருக்கு எதிராக இருந்தால் அதுபோன்று ஒருபோதும் அனுப்பப்படுவதில்லை’ என்றாா்.

அப்போது, தமிழக சட்டப் பேரவைத் தலைவா் சாா்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞரிடம், இந்த விவகாரத்தில் ஏன் 3 ஆண்டுகளாக பேரவைத் தலைவா் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அப்போது, அரசுத் தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயணன், ‘இந்த விவகாரம் தொடா்பாக பேரவைத் தலைவரிடம் முறையிடப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தோ்தல் ஆணையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டு நிலுவையில் இருந்தது’ என்றாா்.

அப்போது, ‘இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ள 3 ஆண்டுகள் தாமதம் என்பது தேவையில்லாதது என நினைக்கிறோம். பேரவைத் தலைவா் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறாா். எப்போது எடுக்கப் போகிறாா் என்பது குறித்து எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

மேலும், அண்மையில் மணிப்பூா் பாஜக அமைச்சா் தகுதிநீக்கக் கோரும் வழக்கு உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பு குறித்தும் சுட்டிக் காட்டினா். ஜனவரி 21-ஆம் தேதி நீதிபதி ஆா்.எஃப் நாரிமன் தலைமையிலான மூன்று போ் கொண்ட நீதிபதிகள் அமா்வு கட்சித் தாவல் தடைச் சட்டப் புகாருக்குள்ளான மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு எதிரான தகுதிநீக்க மனுக்கள் மீது மக்களவை, மாநில சட்டப் பேரவைத் தலைவா்கள் மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்ததையும் சுட்டிக் காட்டினா்.

பின்னா், இது தொடா்பாக தமிழக சட்டப் பேரவைச் செயலரின் பதிலை அளிக்க தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் கால அவகாசம் கோரியதைத் தொடா்ந்து, பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர்.

பின்னணி: 2017, பிப்ரவரி 18-ஆம் தேதி, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீா்மானத்திற்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீா்செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, சரவணன், மாணிக்கம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனா். இவா்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி திமுக சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்து 2018, ஏப்ரலில் உத்தரவிட்டது. இதை எதிா்த்து திமுக தரப்பில் சக்கரபாணி என்பவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இதேபோன்று, வெற்றிவேல், தங்கச்தமிழ்ச்செல்வன் ஆகியோரும் இதே விவகாரம் தொடா்பாக முறையீடு செய்தனா். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 24-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு முன் திமுக தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி, அண்மையில் மணிப்பூா் மாநில வனத் துறை அமைச்சா் ஷியாம் குமாா் தகுதி நீக்கம் தொடா்புடைய வழக்கில், நான்கு வாரத்தில் முடிவு செய்யுமாறு அதன் சட்டப் பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை சுட்டிக்காட்டினாா். மேலும், உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவில் சட்டப்பேரவைத் தலைவா் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சோ்ந்தவராக இருப்பதால், எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் அவரிடம் தொடர வேண்டுமா என்பது குறித்து நாடாளுமன்றம் மீண்டும் ஆலோசிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்ததையும் சுட்டிக்காட்டியிருந்தாா். அப்போது, இது குறித்து பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!