கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி 6 சுகாதார ஊழியர்கள் பலி
by Steephen, Benatசீனாவில் பரவி வரும் கொரோனா என்ற Covid 19 வைரஸ் தொற்றிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சுகாதார ஊழியர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுகாதார ஊழியர்களில் ஆயிரத்து 716 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த காலத்தில் அது பற்றி தகவல்களை வெளியிட்ட மருத்துவர் உயிரிழந்த பின்னர், அவரை பற்றி உலகம் முழுவதும் பேசப்பட்டதுடன் சுகாதார ஊழியர்கள் பற்றி பெரிதாக பேசப்படவில்லை.
நாளுக்கு நாள் சுகாதார ஊழியர்கள் Covid 19 வைரஸூக்கு பலியாகி வருவதாக சீன தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலைமையை தடுக்க இன்னும் முடியாமல் போயுள்ளதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.
இதனிடையே தமக்கு வழங்கும் வசதிகள் சம்பந்தமாக சீன சுகாதார ஊழியர்கள் தொடர்ந்தும் குறை கூறி வருகின்றனர். எனினும் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ள சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள தேவையான முகமூடிகள் போதுமான அளவில் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படுவதில்லை என சுகாதார ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சீனா முழுவதும் முகமூடிகள் உட்பட பாதுகாப்பு உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நபர்கள் மாத்திரமல்லாது இறப்புகளும் அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.