மேலும் மேலும் உயரும் தமிழக அரசின் கடன்..: 2020-21 நிதியாண்டில் ரூ.4,56,660.99 கோடியாக உயர்ந்துள்ளதாக பட்ஜெட்டில் தகவல்!
சென்னை: 9 ஆண்டுகளுக்கு முன் 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் கடன் படிப்படியாக உயர்ந்து ரூ4.56 லட்சம் கோடிக்கு உயர்ந்துள்ளது. இது வரும் ஆண்டில் 5 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. கடன் அதிகரித்துள்ளதால் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 9 ஆண்டுகளுக்கு முன் அதாவது 2011ம் ஆண்டு தமிழக அரசின் கடன் ரூ.1,18,610 கோடி 2016ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, அரசின் கடன் ரூ.2,52,431 கோடியாக அதிகரித்திருந்தது. இதை அப்போதைய நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வமே சட்டமன்றத்தில் பட்ஜெட் உரையில் கூறினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உள்கட்சி சிக்கலால் நிதித்துறை ஜெயக்குமாருக்கு போனது. 2017-2018ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அவர், அரசின் கடன் ரூ.3,14,366 கோடி என்றார். இந்த சூழலில் தான் மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்றார் பன்னீர் செல்வம். 2018-2019 நிதியாண்டிலும் கடன் தொகை ரூ.41,000 கோடி உயர்ந்து ரூ.3,55,844 கோடியானது. அடுத்த நிதியாண்டிலும் கடன் அளவு உயர்ந்து ரூ.3,97,495 கோடி கடன் இருப்பதாக தெரிவித்தார் பன்னீர்செல்வம்.
இந்த நிலையில் தான் 2020- 2021ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது தமிழக அரசின் கடன் ரூ4,56,660.99 என நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.27 சதவீதம் இருக்கும். தமிழக பொருளாதார வளர்ச்சியானது தேசிய பொருளாதார வளர்ச்சியை விட அதிகமாக இருக்கும். மொத்த வருவாய் ரூ.2,19,375 கோடியாகவும், செலவு ரூ.2,41,601 கோடியாகவும் இருக்கும். தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.22,226 கோடியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.