http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__549480617046357.jpg

டி20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் ஹுக்கா பார் அதிபரை கைது செய்யாமல் இருக்க 10 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்

சென்னை: மேற்கு இந்திய தீவுகளில் நடந்த டி20 கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை விடுவிக்க இன்ஸ்பெக்டர் ஒருவர் 10 லட்சம் லஞ்சம் வாங்கியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் உயரதிகாரிகள் கிடுக்கிபிடி விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சூளை ஹன்டர்ஸ் சாலையில் உள்ள ஆற்காடு காம்ப்ளக்ஸ் ஒன்றில் தங்கம் மற்றும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ரகுல் டி.ஜெயின், தினேஷ் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர். ஆனால், இந்த சூதாட்டத்திற்கு மூளையாக இருந்த ஜெய்ஷா 4 மாதமாக தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க வேப்பேரி இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் ஹுக்கா பார் உரிமையாளர் ஜெய்ஷா மற்றும் புரசைவாக்கம் சுந்தரம் லேன் பகுதியை சேர்ந்த பைனான்சியர்களான அக்‌க்ஷய்(26), விக்ரம்(29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெய்ஷாவிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: உதவி கமிஷனர் மகேஸ்வரி தலைமையிலான தனிப்படையினர் சூதாட்டம் நடந்த கட்டிடத்தில் சோதனை நடத்தினர். அப்போது, போலீசார் சோதனை நடத்துவது குறித்து ஜெய்ஷாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ஜெய்ஷா அலுவலகத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது, சூதாட்டத்தில் சம்பாதித்த ₹93 லட்சம் பணத்தை இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.
 
பின்னர் சூதாட்டத்தில் 30 லட்சம் இழந்து போலீசாருக்கு புகார் அளித்த நபரான ரோநக் சோர்தியா என்பவருக்கு பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் இருந்து சூதாட்டத்தில் விட்ட 30 லட்சம் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்றால் ₹7 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என அந்த இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். அதன்படி புகார் கொடுத்த நபர் சூதாட்டத்தில் இழந்த பணம் திரும்ப கிடைத்தால் போதும் என்று 7 லட்சம் பணத்தை கொடுத்து ₹30 லட்சம் பணத்தை அந்த இன்ஸ்பெக்டரிடம் இருந்து வாங்கி உள்ளார்.பிறகு இன்ஸ்பெக்டரிடம் சிக்கிய முக்கிய குற்றவாளியான ஜெய்ஷா வை கைது செய்யாமல் விடுவிக்க ₹5 லட்சம் பணத்தை அந்த இன்ஸ்பெக்டர் கேட்டுள்ளார். அதற்கு ஜெய்ஷா வக்கீல் மூலம் ₹3 லட்சம் பணத்தை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்துள்ளார். அதைதொடர்ந்து முக்கிய குற்றவாளியான ஜெய்ஷாவை இன்ஸ்பெக்டர் விடுவித்துள்ளார். பிறகு சூதாட்டத்திற்கான முக்கிய ஆதாரங்கள் ஜெய்ஷா லேப்டாப்பில் இருந்துள்ளது. அதையும் அந்த இன்ஸ்பெக்டர் அழித்துள்ளார். பிறகு தான் சூதாட்டம் குறித்த சோதனையில் ₹53 லட்சம் பணம் 3 லேப்டாப், 3 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் கணக்கு காட்டியுள்ளனர்.

இந்த வழக்கில் தலைமறைவான ஜெய்ஷா பெங்களூரில் சிறிது காலம் பதுங்கி இருந்தார். பிறகு சென்னை வந்த ஜெய்ஷா சூளையில் உள்ள தனது வீட்டை காலி செய்துவிட்டு தற்போது மயிலாப்பூரில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் முக்கிய குற்றவாளியான  ஜெய்ஷா பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் முக்கியமானது இன்ஸ்பெக்டருக்கு ₹10 லட்சம் பணம் கொடுத்து தலைமறைவானது. அதன்பிறகு ஜெய்ஷா வாக்குமூலம் குறித்து போலீஸ் கமிஷனர்  ஏ.ேக.விஸ்வநாதன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் போலீஸ்  கமிஷனர்  விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உயரதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து குற்றவாளி ஜெய்ஷாவிடம் லஞ்சம் வாங்கிய  இன்ஸ்பெக்டரிடம் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த  விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி  உள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் சஸ்பெண்ட் செய்யப்படலாம்.