http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__259334743022919.jpg

தமிழக சட்டப்பேரவையில் பிப் 18ல் காவிரி டெல்டா பாதுகாப்பு மசோதா தாக்கல்?: நடப்பு கூட்ட தொடரிலேயே நிறைவேற்ற அரசு திட்டம்

சென்னை: காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி தாக்கல் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பை தொடர்ந்து தலைமை செயலாளர் சண்முகம் சட்டநிபுணர்களுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து, காவிரி டெல்டா பாதுகாப்பு மசோதாவுக்கான முன்வரைவை உடனடியாக தயார் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவையின் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வரும் 18ம் தேதி மசோதாவை தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இது சட்டமானால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா பரவியுள்ள 8 மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த முடியாது. ஆனால் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்த மசோதாவை நடைமுறைப்படுத்த முடியுமா என்று சட்ட நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து மத்திய அரசுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியுள்ளதா? மத்திய அரசு ஒப்புக்கொண்டுவிட்டதா? என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், மக்களை ஏமாற்றும் வெற்று அறிவிப்பாக இல்லாமல் அதனை செயல்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.