https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/13/original/love.JPG

உங்க காதலை சொல்லப் போறீங்களா?

by

காதல்... இந்த வார்த்தை யாருக்குத்தான் பிடிக்காது. காதல் என்ற ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டாலும், அன்பானவர்கள் கூறும் அந்த மூன்று வார்த்தை ஒவ்வொருக்கும் தனிசுகம் தானே. வாழ்க்கையில் அந்த மூன்று வார்த்தைகளை கேட்காதவர்கள் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் என்றுகூட சொல்லலாம்.

ஆனால், உறவுகளைப் பொறுத்து அந்த வார்த்தைகளின் உணர்ச்சிகள் வேறுபடுகின்றன. நமக்கு பிரியமானவரிடம் வரும் காதல் உணர்ச்சிகள் சில நேரங்களில் அருமருந்தாகவே பார்க்கப்படுகிறது. வாழ்க்கையை அழகாக்கும், அற்புதமாக்கும் இந்தக் காதல், தினம் தினம் கொண்டாடப்பட வேண்டியவை. என்றாலும், உலகறிய வருடத்திற்கு ஒருமுறை அனைத்து தரப்பினராலும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அப்படிப்பட்ட உணர்ச்சிகள் ததும்பும் காதலை தங்கள் அபிமானவரிடம் சொல்வதற்கு பலர் தயக்கம் காட்டுகின்றனர். உண்மையான அன்பை தெரியப்படுத்துவதற்கு ஏன் தயக்கம் காட்ட வேண்டும்? இந்த உலகத்தில் தற்போது அன்புக்குதான் பஞ்சம் அதிகம் என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம். காதலும் அன்பின் மிகுதியே. இளம் வயதில் தன் மனதில் பூத்த காதலை சொல்லியிருக்கலாமே என இன்று புலம்புபவர்கள் ஏராளம். அந்தவகையில் இக்கால தலைமுறையினர் அதிபாக்கியசாலிகள். ஆதலால், உங்கள் காதல் ஜெயிக்கிறதோ, தோற்கிறதோ அதனை உங்கள் அபிமானவருக்கு தெரியப்படுத்திவிடுங்கள். நாளைய தினம் நிச்சயமில்லாத உலகத்தில் அன்பைச் சொல்வதற்கு தயக்கம் வேண்டாம். 

ஒவ்வொரும் காதலைச் சொல்லும்போது ஒவ்வொரு மனநிலையில் இருப்பார்கள். எனினும், உங்களுக்கு உதவும் சில குறிப்புகள் இதோ..

யதார்த்தமாக இருங்கள்

காதலில் இன்றைய இளம் தலைமுறையினர் யதார்த்தத்தையே விரும்புகின்றனர். பழைய திரைப்படங்களில் மலை உச்சியில் நின்று 'ஐ லவ் யூ' என்று கூறி அதன் எக்கோ சத்தத்திற்காக இன்று யாரும் காத்திருப்பதில்லை. 'உங்களை எனக்கு புடிச்சுருக்கு' என்று மிகவும் சாதாரணமாக கூறுவதையே விரும்புகின்றனர். வேண்டுமென்றால் உங்களுக்கு ஏற்ப அதில் சற்று சுவாரசியத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய அபிமானவருக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு அதனை பரிசளித்து ப்ரொபோஸ் செய்யலாம். நம் வாழ்வில் ஒவ்வொரு உறவும் தனித்துவமானது. அதிலும், கண்மூடித்தனமாக நமக்கு பிடிக்கும் ஒருவருக்கு அந்தக் காதலை தெரியப்படுத்தச் செல்லும்போது யதார்த்தமான அதே நேரத்தில் சற்று வித்தியாசமான காதல் வெளிப்பாடு உண்மையில் எதிரானவரைக் கவரும்.

நமது வார்த்தைகள் ஒட்டுமொத்த அன்பையும் வெளிக்காட்ட வேண்டும். எனவே, உங்களுக்கு எந்த மொழியில், என்ன உடல் மொழியில் கூற முடியுமோ, அவ்வாறு கூறுவது உங்கள் காதலிக்கு புரிதலை ஏற்படுத்தும். 

பாராட்ட மறக்க வேண்டாம்

காதலிப்பவர்களுக்குத் தெரியும். நமக்குப் பிடித்தவர், மற்றவர்கள் கண்களுக்கு அழகாக தெரிகிறாரோ, இல்லையோ, நம் கண்களுக்கு கொள்ளை அழகாகத் தெரிவர். அவர்கள் செய்யும் தவறுகளை கூட நாம் எளிதில் மன்னித்து விடுவோம். அவர்களின் கோபமூட்டும் செயல்களைக் கூட பல நேரங்களில் ரசிப்பதுண்டு. அவ்வாறு உங்கள் அபிமானவருக்கு காதலைச் சொல்லும்போது அவர்களின் அழகை பாராட்டத் தவறாதீர்கள். அவர்கள் செய்யும் சில 'செல்ல' சேட்டைகளையும் அவ்விடத்தில் நினைவு கூறுங்கள். எதிரானவர் கோபமடைய முற்பட்டால் கூட அது தடுத்துவிடும். 

பயம் வேண்டாம்

ஒருவர் காதலை சொல்லும்போது கண்டிப்பாக இதயம் பன்மடங்கு வேகமாக செயல்படும். அதிலும், முதல்முறையாக காதலை வெளிப்படுத்த செல்பவருக்கு '96' படத்தின் ராமகிருஷ்ணனின் கதிதான். காதலியைப் பார்த்தவுடன் மயக்கம் கூட வரலாம். ஆனால், சிறிது நேரத்திற்கு உங்களை திடப்படுத்திக் கொண்டு எளிமையாக நேர்மையாக காதலை தெரிவியுங்கள்.

நீங்கள் விரும்புகின்றவர் அதனை எப்படி எடுத்துக்கொள்வார் என்றெல்லாம் அந்த நேரத்தில் யோசிக்காதீர்கள். அவர் ஏற்றுக்கொள்வாரா, நிராகரிப்பாரா என்றெல்லாம் உங்களை குழப்பிக்கொள்ளாமல் உங்களது பாணியில் காதலைச் சொல்லுங்கள்.

உங்களுக்கு பிடித்தமானவர்தானே? என்ன செய்துவிடப்போகிறார்? அப்படியே செய்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள், வாழ்க்கையின் மறக்கமுடியாத தருணம் அது. 

பெண்களோ, ஆண்களோ, ஒருவர் நம்மிடம் வந்து காதலைச் சொல்லும்போது முகத்தில் கோபத்தை காட்டுபவர்கள் கூட நீங்கள் சென்றபிறகு அதனை நினைத்து ரசிப்பதுண்டு. அதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

கண்களிடம் தெரிவியுங்கள் 

அனைத்து வகையான வித்தியாசமான ப்ரோபோசல்களுக்குப் பின்னாலும் அன்புக் காதல் மட்டுமே ஒளிந்திருக்கிறது. கண்களில் அன்புடன் காதலைச் சொல்லுங்கள். அன்பின் மொழியான கண்களின் வழியே ஒழுகி ஓடும் அன்பு நேரடியாக எதிரானவரைச் சென்று சேருகிறது.

மொழி வெளிப்பாடு அவசியம்

'ஐ ஆம் ஆல்வேய்ஸ் வித் யூ' என்று சொல்வதற்கும் ' நான் உன்னுடன் எப்போதும் இருக்கிறேன்' என்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆனால், எந்த மொழியானாலும் அந்த மூன்று வார்த்தைக்கு சக்தி அதிகம்தான். எனினும் நமது மொழியில் அதனைச் சொல்லும்போது புரிதலும் சரி, சென்று சேரும் செய்தியும் சரியான பதத்தில் வெளிப்படும். 

வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

சாதாரணமாக காதலை சொல்லிவிடாமல் 'உனது சுக, துக்கத்தினை பகிர்ந்துகொள்வேன்', 'உனது சின்ன சின்ன எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வேன்', 'கருத்து வேறுபாடு வந்தாலும் பிரிய மாட்டேன்', அதைவிட 'உனக்கும், காதலுக்கும் உண்மையாக இருப்பேன்' என்று வாக்குறுதி அளியுங்கள். இந்த வார்த்தைகளைவிட யாரும் பெரிதாக எதிர்பார்த்துவிட மாட்டார்கள்.

காதலின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்கப்போகும் நீங்கள் காதலை முதலில் சொல்லும் அந்த தருணம் மிக முக்கியமானதே.. அந்த இனிமையான தருணத்தை இந்த காதலர் தின நாளில் அனுபவியுங்கள்.

இறுதியாக, நமது நண்பர்களுக்கு இருப்பது போல நமக்கும் ஒரு கேர்ள் பிரண்ட், பாய் பிரண்ட் வேண்டும் என்று நினைக்காமல் உண்மையிலே ஒரு பெண்ணையோ, ஆணையோ பார்க்கும்போது மனதில் பட்டாம்பூச்சி பறந்தால் மட்டுமே காதலைச் சொல்லுங்கள். வாழ்க்கையில் காதலின் ஆழத்தை கண்டிப்பாக உணருவீர்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!