கொடூர கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் நேற்று மட்டும் 116 பேர் உயிரிழப்பு...இதுவரை 1,483 பேர் பலி
சீனா: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் நேற்று மற்றும் 116 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது. எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தும் இந்த வைரசினால் சீனாவில் 1350 பேர் பலியாகியுள்ளதாகவும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சீன அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இந்நிலையில் சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,483 ஆக அதிகரித்துள்ளது.
இன்னும் 64,600 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானின் யோகோஹாமில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் 218 பேருக்கு கோவிட் -19 என்ற 'கொரோனா' வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் உலகிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. வைரஸ் “எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும் விட சக்திவாய்ந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்று கூறியுள்ளது. இதற்கிடையில், வியட்நாம் தலைநகர் ஹனோய்க்கு வடமேற்கே 10,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட ஒரு பகுதி பிற இடங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே தனிமைப்படுத்த உத்தரவிட்ட முதல் இடமாக இது திகழ்கிறது.