தொலைபேசி கடை உடைப்புடன் தொடர்புடைய நால்வர் கைக்குண்டு, வாள்களுடன் கைது
திருகோணமலை மற்றும் கந்தளாயில் தொலைபேசி கடை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை கைக்குண்டு, வாள்களுடன் நேற்று (13) இரவு கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை நகரிலுள்ள 2 தொலைபேசி கடைகளையும், கந்தளாயில் உள்ள ஒரு தொலைபேசி கடையையும் உடைத்து தொலைபேசிகள், 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மீள்நிரப்பு அட்டைகள், 2 மடிக் கணணிகள், பற்றரிகள், சாச்சர், 1 இலட்சம் ரூபா பணம் போன்ற பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் நால்வரை கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக குற்ற விசாரணை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் நால்வரையும் கார் ஒன்றில் தம்பலாகாமம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் காத்தான்குடி, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 25, 18, 19 மற்றும் 34 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைக்குண்டு, வாள்கள், சிறிய கத்தி, மடிக்கணணி 2, பணம், தொலைபேசிகள் மற்றும் பூட்டுகளை உடைக்கும் கருவி போன்றன கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் பயன்படுத்திய கார் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
-திருகோணமலை நிருபர் பாருக்-