http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_141369044780732.jpg

4 பேருக்கும் தூக்கு உறுதி!.. தன்னை சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளி பவன் குப்தாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தன்னை சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என பவன்குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

*டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி (நிர்பயா), 6 இளைஞர்களால் கற்பழித்து கொடூரமாக தாக்கப்பட்டார். உயிருக்கு போராடிய அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

*இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட ராம்சிங், பவன்குப்தா, முகேஷ்சிங், வினய் சர்மா, அக்சய் தாக்கூர் மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டான்.

*இந்த வழக்கில் 6 பேரில் 5 குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் சிறைக்குள் தற்கொலை செய்துகொண்டான்.

*சிறுவன் கடந்த 2015-ம் ஆண்டு தனது தண்டனை காலம் நிறைவடைந்ததையடுத்து விடுவிக்கப்பட்டான். மற்ற குற்றவாளிகளான பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா, அக்‌ஷய் தாக்கூர் ஆகிய 4 பேருக்கும் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

*இதற்கிடையில் இந்த வழக்கில் மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவனான பவன் குமார் குப்தா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தான்.

*அதில், கடந்த 2012-ம் ஆண்டு போலீசார் தன்னை கைது செய்தபோது தான் சிறுவனாக இருந்ததாகவும், அதை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் தனக்கு சிறார் சட்டப்பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தான்.

*இந்த மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என கூறி பவன் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் நிர்பயா குற்றவாளிகளில் ஒருவனான பவன் குப்தாவின் தூக்கு தண்டனையும் உறுதியானது.முன்னதாக பவன் குப்தா இதே போன்ற மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்நிலையில் நிர்பயா குற்றவாளி பவன் குப்தா உச்சநீதிமன்றத்தில் மீண்டும் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில்,சம்பவம் நடந்த போது தான் ஒரு சிறார்.எனவே தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்த முடிவை உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே பவன் குப்தாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில், அவர் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.

* இதனிடையே இந்த மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி உச்சநீதிமன்றம் பவன் குமாரின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.