மோசடியைத் தடுக்க புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பேடிஎம் வங்கி
by DINபாதுகாப்பு கருதி பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் தளத்தில் ஏ.ஐ. (Artificial Intelligence) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
பணப்பரிமாற்றத்தின்போது மோசடி செய்பவர்களிடமிருந்து பயனர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் பரிவர்த்தனை விபரங்களை பாதுகாக்கவும், பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது.
அதன்படி, பேடிஎம் தளத்தில் ஏ.ஐ எனப்படும் 'ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்' தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகிறது. யாரேனும் உங்களது கணக்கு விபரங்களை ஹேக்கிங் செய்ய முயற்சித்தால் அது தெரிய வந்து விடும். மேலும், சந்தேகத்திற்கு இடமான பணப்பரிவர்த்தனைகளை அடையாளம் காண முடியும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பயனர் வேறு ஏதேனும் சாதனத்தில் கணக்கு உபயோகிக்கும்போது, அதற்கான எச்சரிக்கை பாப்-அப் செய்தியை இந்த பாதுகாப்பு அம்சம் வழங்கும்.
மேலும், இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 200க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை முக்கியஸ்தர்களைக் கொண்ட ஒரு பிரத்யேக குழுவை நிறுவனம் கொண்டுள்ளது .
இந்த குழுக்கள் அனைத்து மாநில, மத்திய போலீஸ் படைகள், சைபர் செல்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் நெருக்கமாக செயல்பட்டு, மோசடி பரிவர்த்தனைகளைக் கண்டறிந்து, தடுக்கவும், புகாரளிக்கவும், உதவும். அதுமட்டுமின்றி, எஸ்.எம்.எஸ் மற்றும் போன் அழைப்பு மோசடிகளில் ஈடுபட்ட 3,500 தொலைபேசி எண்களின் விரிவான பட்டியலை வங்கி அதிகாரிகளுக்கு சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.