https://s3.amazonaws.com/adaderanatamil/1580472997-bandula-2.jpg

ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கி சிரமத்துக்கு உள்ளாக்குவது எமது கொள்கை அல்ல

கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு ஒன்றை காண்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

முன்னைய அரசாங்கத்தைப் போன்று தமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஊர்வலங்களில் ஈடுபடும் இளைஞர் யுவதிகளை தாக்கி சிரமத்துக்கு உள்ளாக்குவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) மாலை நடைபெற்ற செய்தியாளர்களுடனான மாநாட்டில் அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார். நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற இளைஞர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவு படுத்துவதற்காக இந்த செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.

இந்த செய்தியாளர் மாநாட்டில் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே, கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல அக்குமுர, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உயர் கல்வி நிறுவனங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் சுமூகமாக பேச்சுவார்தை நடத்தி அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்துள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேபோன்று யாழ் பல்கலைக்கழகம் முதலான பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாவும் அமைச்சர் கூறினார்.

இதில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே, கலாச்சார மத அலுவல்கள் அமைச்சில் கடந்த அரசாங்த்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடான நியமனங்கள் குறித்தும் விபரித்தார். கலாச்சார நிதியத்துக்கு ஒப்பந்த அடிப்படையிலும் தற்காலிக அடிப்படையிலும் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் பலரது சேவைக்காலம் முடிவடைந்துள்ளது. 3000 ற்கு மேற்பட்டோர் குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் பார்க்க சாதாரணதர பதவிப் பொறுப்புக்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் நாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனிதநேய கொள்கைக்கு அமைவாக இவர்களது பிரச்சினைகளை சுமூகமாக தீர்ப்பதில் கவனம் செலுத்தியுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில் கலாச்சார நிதியம் 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையில் கடந்த அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்பட்ட முறை குறித்து விபரித்தார்.

1600 மில்லியன் ரூபாவை இந்த நிதியம் தனியார் துறைக்கு செலுத்த வேண்டியுள்ளதுடன், டிசம்பர் மாதத்தில் ஊழியர்களில் சம்பளத்துக்காக 270 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிதியம் முறைகேடான செயற்பாட்டின் காரணமாக பெருந்தொகை நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்பொழுது எதிர்நோக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 2 வாரத்துக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)