http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_13408839702607.jpg

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு - புதிய பதிவெண் பட்டியல் வெளியீடு

சென்னை: 2019ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு தொடர்பாக 39 பேரின் புதிய பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 39 பேரின் புதிய பதிவெண் பட்டியலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டது. பதிவெண் பட்டியலில் இடம்பெற்ற தேர்வர்கள் பிப்ரவரி 1ம் தேதி முதல் சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்யலாம். பிப்ரவரி 7ம் தேதி வரை ஆன்லைன் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 போட்டி தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தற்போது குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வுகளிலும், காவலர் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குரூப்-4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்த விசாரணை சிபிசிஐடி போலீசாரால் முறையான பாதையிலேயே விசாரிக்கப்பட்டு, குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தேவையில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குரூப்-4 தேர்வு முறைகேட்டின் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர சிபிஐ விசாரணை தேவை. ஆகவே குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் உள்துறை செயலாளர், சிபிஐ இணை இயக்குனர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் டிஎன்பிஎஸ்சி மற்றும் சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.