நிச்சயமான பிறகு, திருமணம் செய்ய மறுப்பு: ‘பிக் பாஸ்’ தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி புகார்!
by எழில்தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக பிக் பாஸ் தர்ஷன் மீது அவருடைய காதலியும் நடிகையுமான சனம் ஷெட்டி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வருடம் பங்குபெற்றார் இலங்கைத் தமிழர் தர்ஷன். பட்டத்தை வெல்லக் கூடியவர் என போட்டியாளர்களாலும் ரசிகர்களாலும் கருதப்பட்ட தர்ஷன், கடைசி வாரத்துக்கு முன்பு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் தர்ஷனின் காதலியும் நடிகையுமான சனம் ஷெட்டி, தர்ஷனுக்கு எதிராக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு, தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறிய தர்ஷன், நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு தன்னை ஏமாற்றுவதாகப் பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
எனக்கும் தர்ஷனுக்கும் மே 12, 2019-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 200 உறவினர்கள் முன்பு இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அதே வருடம் ஜுன் 10-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. கல்யாண வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான வாய்ப்பு தர்ஷனுக்குக் கிடைத்தது. திருமணம் செய்துகொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் பெண் ரசிகர்கள் குறைந்துவிடும், நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தவுடன் திருமணத்தை அறிவிக்கிறேன் என்று வாக்குமூலம் கொடுத்துவிட்டு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். என்னிடம், நமக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததையும் திருமணம் நடக்கவிருப்பதையும் வெளியே சொல்லக்கூடாது, அப்படிச் சொன்னால் என்னுடைய புகழ் கெட்டுவிடும் என்று சத்தியம் வாங்கினார். அப்படிச் சத்தியம் செய்ததால் தான் இதுவரை அதுகுறித்து வெளியே சொல்லாமல் இருந்தேன்.
பிக் பாஸில் அவருக்கு நிறைய புகழ் கிடைத்தது. மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் அவருக்கு பிக் பாஸ் விண்ணப்பத்தை அனுப்பியதே நான் தான். இரண்டரை வருடங்கள் நாங்கள் காதலித்து வந்தோம். அவர் படத்தில் நடிப்பதற்கும் விசாவுக்காகவும் ரூ. 15 லட்சம் நான் செலவழித்துள்ளேன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த முதல் நாளிலேயே தர்ஷன் மாறிவிட்டார்.
அவரிடம் பேச முயற்சி செய்தபோது அவமானப்படுத்தும்படி பேசினார். என் பிரச்னைக்காக முகின், கவின் அண்ணா, சாண்டி குடும்பத்தினரிடம் பேசிப் பார்த்தேன். ஏனெனில் என் பிரச்னையைப் பொதுவில் சொல்ல முடியாது. விருது விழாவுக்கு அவரை அழைக்கும்போது, சனம் ஷெட்டி வருவதாக இருந்தால் என்னை விழாவுக்கு அழைக்கவேண்டாம், அவள் என் பக்கத்தில் நிற்கக்கூடாது என்று கூறினார். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டேன். என் பக்கத்தில் நிற்க உனக்கு என்ன தகுதி உள்ளது, நீ பிக் பாஸில் கலந்துகொண்டாயா என்று கேட்டார். அவரிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று இலங்கைக்குச் சென்று அவருடைய பெற்றோரைச் சந்தித்தேன். அவர்களும் எனக்கு உதவி செய்யவில்லை. அப்போது உன் மீது காதல் இருந்தது, இப்போது இல்லை என்கிறான். ஒன்றும் செய்யமுடியாது என்று எனக்குப் பதில் அளித்தார்கள்.
மீண்டும் சென்னைக்கு வந்து தர்ஷனிடம் பேசிப்பார்த்தேன். உனக்குப் பொதுவில் சொல்வது பிரச்னையாக இருந்தால் 6 மாதம் கழித்துக்கூடத் திருமணம் செய்துகொள்ளலாம் என்றேன். இல்லை, உன்னை எனக்குப் பிடிக்கவில்லை, உன் நடத்தை சரியில்லை, நீ படத்தில் நடிக்கிறாய், எனக்கு நடிகை வேண்டாம் என்றார். அவர் என்னைப் பார்த்த நாள் முதல் நான் நடிகையாகத்தான் உள்ளேன். என்னிடம் உதவி கேட்டபோது எல்லாம் நான் நடிகை என்று தெரியவில்லையா? நீ பல படங்களில் நடிக்கிறாய், நீ நடிக்கும் படங்களில் அதன் நடிகர்களுடன் உனக்கு தகாத உறவு உள்ளது என்று என்னை மன ரீதியாகத் தாக்கினார். வழக்கு தொடுப்பதாக இருந்தால் செய்துகொள், எனக்குப் பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். நீ வாயைத் திறந்தால் உன்னை அமைதியாக்கத் தெரியும் என்று மிரட்டினார்.
எனவே இன்று வேறு வழியில்லாமல் காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். இந்த அழுத்தங்களினால் என் தந்தைக்குக் கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. அப்போதுகூட அவர் ஒரு போன் பண்ணவில்லை. நம்பிக்கைத் துரோகம் செய்து என்னை தர்ஷன் ஏமாற்றியுள்ளார். திரைத்துறையில் அவர் புகழடைய வேண்டும் என்பதற்காக நிறைய செய்துள்ளேன். ஆனால் அவர் புகழை அடைந்தபிறகு, என்னை அவமானப்படுத்துகிறார். இந்த நிலைமைக்கு என்னைக் கொண்டு வந்துள்ளார். சினிமா ஒரு தொழில். அவரும் இப்போது ஒரு நடிகர் தான். ஆனால் என் நடத்தையைத் தவறாகப் பேசுகிறார். நீ வாயைத் திறந்தால் உனக்கு யாரும் ஆதரவு அளிக்க மாட்டார்கள். அவன் அந்தளவுக்கு வளர்ந்துள்ளான். அவன் ரசிகர்கள் உன்னை அமைதியாக்கிவிடுவார்கள் என்று அவர் தரப்பிலிருந்து என்னை மிரட்டுகிறார்கள்.
எனக்கு நியாயம் வேண்டும். நிச்சயதார்த்தம் நடந்தது, நான் உதவி செய்தது, அவர் என்னைத் திருமணம் செய்யவிருந்தது என எல்லாவற்றையும் அவர் வெளியே சொல்லவேண்டும். அவருடைய பெண் ரசிகர்கள் குறைந்துவிடுவார்கள் என்பதால் தான் இத்தனை நாள் அமைதியாக இருந்தேன். மலேசியாவுக்கு ஒரே விமானத்தில் சென்றபோது அவரிடம் நான் கேட்டேன், ஏன் இப்படிச் செய்கிறாய் என்று. அதற்கு அவர் சொன்னார், உன்னை மாதிரி ஒரு நடிகையை நான் திருமணம் செய்தால் வளர முடியாது என என்னுடைய நண்பர்கள் அறிவுரை கூறினார்கள். எனக்கும் அது சரியாக இருந்தது என்றார்.
நான் அவரைக் கல்யாணம் செய்ய விரும்புகிறேனா என எனக்குத் தெரியாது. என்னைத் திருமணம் செய்ய அவர் என்னை ஒப்புக்கொள்ளவேண்டும். இதற்குப் பிறகு என்ன ஆகிறது என்று பார்க்கலாம். முதலில் அவர் என்னை ஏற்றுக்கொள்ளட்டும். நடந்த எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளட்டும் என்று பேட்டியளித்தார்.