தென் மாவட்ட மக்களின் கனவு நிறைவேற குமரி – மதுரை இரட்டை தொடர் வண்டிபாதை திட்டத்துக்கு அதிக நிதி கிடைக்குமா? – மின்முரசு

நாகர்கோவில்: மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் நடைபெறும் ரயில் திட்டங்களுக்கு கூடுதல் நிதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒருங்கிணைந்த 2020 -21- க்கான மத்திய அரசின் முழு பட்ஜெட் நாளை (1ம்தேதி) தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மத்திய பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டும் இணைந்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. எனவே நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் தமிழகத்துக்கு புதிய ரயில் சேவைகள் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது நடந்து வரும் ரயில்வே வளர்ச்சி திட்டங்களை பல வகைகளாக பிரித்து வகைப்படுத்தலாம்.

இதில் மீட்டர் கேஜ் பாதைகளை அகல பாதையாக மாற்றம் செய்தல், இரு வழிபாதை பணிகள், மின் மயமாக்கல், புதிய இருப்பு பாதைகள் அமைத்தல், புதிய முனைய வசதிகள் ஏற்படுத்துதல், தற்போது உள்ள முனைய வசதிகளை விரிவுபடுத்துதல், தற்போது உள்ள இரு வழிபாதைகளை மூன்று பாதைகளாக மாற்றம் செய்தல், அதி வேக ரயில்வே பாதைகள் அமைத்தல், தற்போது இயங்கும் ரயில்களின் வேகத்தை அதிகரித்தல், புறநகர் ரயிலை விரிவுபடுத்துதல், புதிய ரயில்வே தொழிற்சாலைகள் அமைத்தல் என பல அடிப்படை கட்டமைப்புகள் அடங்கி உள்ளன. இந்த அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு என அதிக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை கட்டமைப்பு இருந்தால் தான் தமிழகம் ரயில்வே போக்குவரத்து துறையில் வளர்ச்சி பெறும் என்பது ரயில்வே பயணிகள் சங்கங்களின் கோரிக்கை ஆகும்.

தென் மாவட்டங்களை பொறுத்தவரை, கன்னியாகுமரி – மதுரை வரை உள்ள ரயில் பாதையை இரு வழிபாதையாக மாற்ற வேண்டும் என்பது நீண்ட கால எதிர்பார்ப்பு ஆகும். கடந்த 2015 – 16 ஆம் ஆண்டு ரயில்வே நிதி நிலை அறிக்கையில் மதுரை- கன்னியாகுமரி வழித்தடம் இரு வழிபாதையாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்படடது. அதன் படி மதுரை – மணியாச்சி –  தூத்துக்குடி 159 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோவில் 102 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் 87 கி.மீ தூரம் ஒரு திட்டம் என மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை வரும் பட்ஜெட்டில் முழுமையாக ஒதுக்கி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.  இந்த திட்டத்துக்கு கூடுதலாக நிதியை பெறுவதில் தமிழக எம்.பி.க்களும் ஆர்வம் காட்ட வேண்டும் என்பது ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை ஆகும். இந்த இரு வழிப்பாதை பணிகள் முழுமையாக முடிவு பெற்றால் தென் மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சி பெறும்.

இதே போல் கன்னியாகுமரியில் தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை புதிய ரயில்வே இருப்பு பாதை தடம் அமைக்க 2008-09 ரயில் நிதிநிலை அறிக்கையில் தொடக்க நிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 34 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் 462.47 கி.மீ தூரத்தில் சுமார் ரூ. 1965 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று சமர்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆய்வு அறிக்கை அப்படியே கிடப்பில் உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார். ஆனால் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

குமரி மாவட்டம் ஆளூரிலிருந்து நாகர்கோவில் வழியாக நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகில் உள்ள செட்டிகுளத்துக்கு 24 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு அதுவும் இதுவரை செயலாக்கத்துக்கு வரவில்லை. தமிழகத்தில் புதிய  இருப்பு பாதை பணிகளாக மதுரை – தூத்துக்குடி (வழி அருப்புகோட்டை). திண்டிவனம் – செஞ்சி  திருவண்ணாமலை, திண்டிவனம் – நகரி, அத்திபட்டு – புத்தூர், ஈரோடு – பழநி, சென்னை  – கடலூர் (வழி மகாபலிபுரம்), ஸ்ரீபெரும்பூர் – கூடுவாஞ்சேரி, மொரப்பூர்  – தர்மபுரி, ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ஆகிய பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு சில பணிகள் தவிர ஏனைய பணிகள் கிணற்றில் போட்ட கல் போல உள்ளது. இந்த திட்டத்துக்கான நிதியும் கடந்த சில ஆண்டுகளாக மிக குறைந்த அளவே ஒதுக்கி வருகின்றனர். இந்த திட்டத்துக்கான தேவையான நிதியை ஒதுக்கி விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, ராமேஸ்வரம், திருச்சி, விழுப்புரம், கோவை, ஈரோடு, சென்னை எழும்பூர், சென்னை சென்ட்ரல், தாம்பரம் ஆகிய இடங்களில் ரயில்வே முனையங்கள் உள்ளன. இந்த முனையங்களில் ஒரு சில முனையங்களை தவிர்த்து, ஓரளவுக்கு அனைத்து முனையங்களும் தனது கொள்ளளவை 90 முதல் 100 சதமானம் வரை எட்டியுள்ளது. இதனால் இந்த முனையங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும். பல வழி தடங்களில் உள்ள அனைத்து சிக்னல்களை மாற்றி தானியங்கி சிக்னல் முறையை கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்வதால் தற்போது இயங்கி கொண்டிருக்கும் ரயில்களின் பயண நேரம் கணிசமான அளவில் குறைவது மட்டுமின்றி புதிய ரயில்களும் இயக்க முடியும்.

சென்னை பெரம்பூரில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை, திருச்சி பொன்மலை ரயில்வே பனிமனை, போத்தனூர் ரயில்வே தொலைதொடர்பு தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகள் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் ரயில்வே தொழிற்சாலையாக நாங்குநேரியில் மின்சார ரயில் இஞ்சின் தொழிற்சாலை, மதுரைக்கு அருகில் ரயில் வீல் மற்றும் ஆக்சில் தயாரிக்கும் தொழிற்சாலை, திருச்சி தொழிற்சாலையை ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. தென் மாவட்டங்களில் ரயில்வே துறையின் பல்வேறு தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். இதற்கு முதல் படியாக நாகர்கோவில் அருகில் உள்ள அகஸ்தீஸ்வரம் ரயில் நிலையம் இருந்த இடத்தில் மின்சார ரயில் இஞ்சின் பராமரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். இங்கு ரயில்வேக்கு சொந்தமான நிலம் உள்ளதால் எந்த ஒரு நில ஆர்ஜிதம் போன்ற பிரச்சனைகளும் இல்லை.  ஆகவே நாகர்கோவில் அருகில் உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியில் மின்சார ரயில் இஞ்சின் பராமரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துளனர்.

பயணிகளிடம் கட்டண கொள்ளை நிறுத்த வேண்டும்

தமிழகத்தில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்ப புதிய ரயில்கள் இயக்க வேண்டும்.  2000ம் ஆண்டில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மீட்டர் கேஜ் பாதையிலிருந்து அகல பாதையாக பணிகள் நிறைவுபெற்று ஒவ்வொன்றாக பயணிகள் பயன்பாட்டிற்கு வந்தது.  இவ்வாறு வந்ததின் காரணமாக இந்த பகுதி பயணிகளின் வசதிக்காக முதலில் சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு நேரடி ரயில்கள் இயக்கப்பட்டன. 2004-ம் ஆண்டு முதல் 2014—ம் ஆண்டு வரை தமிழக ரயில்வேத்துறையில் அதிக வளர்ச்சி பெற்ற வருடங்கள் என்று கூறலாம். இதில் 2004 முதல் 2009 வரை தமிழகத்திலிருந்து ரயில்வே இணை அமைச்சர் இருந்தபடியால் அதிக திட்டங்கள், அதிகமான புதிய ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் தற்போது தமிழகத்துக்கு புதிய ரயில்கள் இயக்கம் என்பதே இல்லாத நிலை உள்ளது.

பெருகி வரும் மக்கள் தொகை, பொதுமக்களின் பயணங்கள் என்பதை கணக்கில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஐந்து தினசரி ரயிலாவது தமிழகத்துக்கு இயக்க வேண்டும். ஆனால் ரயில்வேத்துறை ஒரு தினசரி ரயில் கூட இயக்க மறுத்து வருகிறது. இதனால் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பழைய வழித்தட ரயில்களில் பயணிகளின் நெருக்கடி அதிகரிக்கின்றது. இவ்வாறு நெருக்கடியை செயற்கையாக அதிகரித்து பயணிகளிடமிருந்து பல்வேறு பெயர்களில் சுவேதா ரயில்,  தக்கால் கட்டண ரயில், சிறப்பு கட்டண ரயில், பிரிமியம் ரயில், பிரிமியம் தக்கால்,  என பகல் கொள்ளை போன்று கட்டணத்தை மறைமுகமாக வசூலித்து வருகின்றது என்றும் பயணிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

Source: Dinakaran

https://secure.gravatar.com/avatar/eb935559ed94ee4406cc037e814e1380?s=100&d=mm&r=g

Puvi Moorthy

Post navigation

புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தோல்வி: வங்கிகள் வேலைநிறுத்தம் 10 லட்சம் ஊழியர் பங்கேற்புஅம்பேத்கரின் இதழியல் பயணத்தின் 100 ஆண்டுகள் நிறைவு – பத்திரிகை துறையில் அவரது பங்கு என்ன?

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/202002010514424667_central-Budget-Filed-Today-Income-Tax-Benefit-Announced_SECVPF.gif

இன்று மத்திய வரவு செலவுத் திட்டம் தாக்கல் – வருமான வரி சலுகை அறிவிப்பு வருமா?

murugan Feb 1, 2020Feb 1, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/Tamil_News_29_Jan_271969020366669.jpg

அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் : ஆய்வறிக்கையில் தகவல்

murugan Feb 1, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/202002010441282405_Bank-employees-strike-Customers-suffer-from-disruption-of_SECVPF.gif

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – சேவைகள் பாதிப்பால் வாடிக்கையாளர்கள் அவதி

murugan Feb 1, 2020Feb 1, 2020 0 comment