குரூப்-1 , குரூப் 2 ,குரூப் 2ஏ.. எந்தெந்த தேர்வுகளில் முறைகேடு? : எழுந்த பல புகார்களுக்கு விளக்க அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்தது டிஎன்பிஎஸ்சி
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள சில தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகார்களுக்கு டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்துள்ளது.
குரூப்-1 தேர்வு
குரூப்-1 தேர்வில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது. குரூப்-1 தேர்வில் வென்ற 181 பேரில் 150 தேர்வர்கள் ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள் என்ற செ்ய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி, ஒரே தேர்வரை ஒன்றுக்கு மேற்பட்ட பயிற்சி மையங்கள் உரிமை கோரும் போக்கு உள்ளதாக தெரிவித்துள்ளது.
குரூப் 2 தேர்வு
குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக சிபிசிஐடி போலீசில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புகார் அளித்துள்ளது. அரசு பணியாளர் தேர்வாணைய புகாரை அடுத்து குரூப் 2 தேர்வு முறைகேடு தொடர்பாகவும் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது.
குரூப் 2ஏ தேர்வு
2017ல் நடைபெற்ற 2ஏ தொகுதி தேர்விலும் தவறு நடந்திருக்கலாம் என்று தேர்வாணையம் சந்தேகிக்கிறது. குரூப் 2ஏ தேர்வு தொடர்பான ஆவணங்களையும் சிபிசிஐடி போலீசிடம் ஒப்படைத்துள்ளதாக தேர்வாணையம் தகவல் அளித்துள்ளது.இத்தேர்வு குறித்தும் விரிவான குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உரிய ஆவணங்களை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது. ராமேஸ்வரம் மையத்தில் இருந்து மட்டும் 42 பேர் தேர்வு பெற்றது தொடர்பாக விசாரணை நடத்தும்படி 42 பேர் பட்டியலுடன் சிபிசிஐடி போலீசில் டிஎன்பிஎஸ்சி புகார் அளித்துள்ளது.
மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான தேர்வு
மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் முறைகேடு புகார் குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான முன்னனுபவ சான்றிதழ் சரிபார்ப்பை போக்குவரத்துத் துறை மேற்கொண்டது, போக்குவரத்துத் துறை அளித்த விவரங்கள் அடிப்படையிலேயே 33 விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. தற்போது உயர்நீதிமன்றம் தனது ஆணையில் போக்குவரத்துத் துறை நடத்திய முன் அனுபவ சான்றிதழ் சரிபார்ப்பில் தவறி நிகழ்ந்துள்ளதாக கூறி இப்பணியை முழுவதும் மறு ஆய்வு செய்ய போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதில் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட முடிவுகள் குறித்து எவ்வித ஐயப்பாடும் எழுப்பப்படவில்லை.
ஒருங்கிணைத்த பொறியாளர் பணித் தேர்வு
இது போலவே தற்போது நடந்து முடிந்துள்ள ஒருங்கிணைத்த பொறியாளர் பணித் தேர்வு முடிவுகளில் அடுத்தடுத்த பதிவெண்கள் கொண்ட தேர்வர்கள் தஞ்சை தேர்வு மையத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகார் குறித்து தேர்வாணையம் தீவிர ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் முடிவில் எந்தவிதமான தவறுகளும் நடைபெறவில்லை என உறுதி ஆகியுள்ளது.
மேலும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்வாணையத்தின் ஒளிவுமறைவற்ற நடவடிக்கைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று தேர்வு எழுதிய மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி வேண்டுகோள் விடுத்துள்ளது. அதே சமயம் இனி,தவறுகள் நிகழாவண்ணம் சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.