http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_779995143413544.jpg

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்பதால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

சென்னை:  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சீனாவின் வுகான் மாகாணத்தில்தான் முதலில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதன்பின்னர்,  14 நகரங்களுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சீன அரசு செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  கொரோனா வைரஸ் தொடர்பாக, இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக, மாநில அரசுகளையும் மத்திய அரசு அலர்ட் செய்துள்ளது.  'நேபாளத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசானது நேபாளத்துக்கு அருகில் உள்ள உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், பீகார் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு அலர்ட் கொடுத்துள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

இதனால், தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சீனாவிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா?  என்று பரிசோதித்த பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என அமைச்சர் கூறினார். விமானநிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இதுகுறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் திருச்சி, கோவை சர்வதேச விமானநிலையங்களிலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஏனெனில்,  அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள் இல்லை என தெரிவித்து,  பொதுமக்கள் இதுகுறித்து  பீதியடைய வேண்டிய அவசியம் இல்லை என்றார். மேலும், இந்த வைரஸ் குறித்து மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதேபோல்,  நம்மிடம் அதற்குத் தேவையான அனைத்து மருந்து மாத்திரைகளும் தயார் நிலையில் உள்ளது என கூறினார். தொடர்ந்து, விமான நிலையங்கள் மட்டுமல்லாமல் துறைமுகங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது' என அவர் தெரிவித்துள்ளார்.