நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 92000 பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு!
டெல்லி: நாட்டில் முதல் முறையாக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து இன்று ஒரே நாளில் 92 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். இது நாட்டின் மிகப்பெரிய ஓய்வு இயக்கங்களில் ஒன்றாகும். ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது, பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனத்திற்கு நிதி நெருக்கடியிலிருந்து வெளிவர ஒரு வழியாகும். இதனை தொடர்ந்து, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் கடந்த பிப்ரவரி மாதம் முதலே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல். நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்திருந்தனர். விருப்ப ஓய்வு திட்டத்திற்கு 50 மற்றும் அதற்கு அதிகமான வயதுடைய ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
பணியில் இருந்த ஆண்டுகளை கணக்கிட்டு, ஆண்டுக்கு 35 நாட்கள் ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும், ஓய்வு பெரும் வயது வரை 25 நாட்களுக்கான ஊதியம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாட்டில் முதல் முறையாக இன்று ஒரே நாளில் 92 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். இவர்களில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் இருந்து மட்டும் 78 ஆயிரத்து 569 பேர் ஓய்வு பெறுகின்றனர். அதேபோல் எம்.டி.என்.எல். நிறுவனத்திலிருந்து 14 ஆயிரத்து 378 பேர் விருப்பு ஓய்வு பெறுகின்றனர். நாடு முழுவதுமுள்ள பி.எஸ்.என்.எல் ஊழியர்களில் சுமார் 51 சதவிகிதம் பேர் பணியில் இருந்து விலகுவது குறிப்பிடத்தக்கது.