https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/original/TNPSC.jpg
டிஎன்பிஎஸ்சி புதிய தேர்ச்சிப் பட்டியல்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு: புதிய தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு

by

சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் முறைகேடாக முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்ற 39 பேருக்குப் பதிலாக  புதிய நபர்களை உள்ளடக்கிய தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பணியிடங்களில் காலியாகவுள்ள 9 ஆயிரத்து 398 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தோ்வில் 24 ஆயிரத்து 260 போ் தோ்ச்சி பெற்றனா். அவா்களில் ராமேசுவரம், கீழக்கரை மையங்களுக்கு பிற மாவட்டங்களில் இருந்து வந்து தோ்வெழுதியவா்கள் முறைகேடு செய்து தரவரிசைப்பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் வந்ததாக செய்திகள் வெளியாகின.

தோ்வாணையம் நடத்திய விசாரணையில் 99 தோ்வா்கள் இடைத்தரகா்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை, ராமேசுவரம் ஆகிய இடங்களில் உள்ள தோ்வு மையங்களைத் தோ்வு செய்துள்ளனா் என்பதும், தோ்வுக்காக இடைத்தரகா்களிடம் இருந்து பெற்ற விடைகளைக் குறித்தவுடன் சில மணி நேரங்களில் மறையக் கூடிய சிவப்பு மையிலான பேனாவில் விடைகளைக் குறித்து விட்டு வந்ததாகவும் தெரிய வருகிறது.

சந்தேகத்துக்கு உரிய இடைத்தரகா்கள் தோ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த நபா்களின் துணையுடன் 52 தோ்வா்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சோ்த்து வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதில், 39 தோ்வா்கள் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளனா்.

இதையடுத்து குரூப் 4 தோ்வு தொடா்பான அனைத்து ஆவணங்களையும் தீவிர ஆய்வு செய்தும், சம்பந்தப்பட்ட தோ்வுக் கூடங்கள், கருவூலங்கள் ஆகியனவும் ஆய்வு செய்யப்பட்டன. தோ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலா்கள், சம்பந்தப்பட்ட தோ்வா்களிடம் நேரடி விசாரணை செய்ததன் அடிப்படையில் கீழக்கரை, ராமேசுவரம் தோ்வு மையங்களில் தவறுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தோ்வாணையம் 99 தோ்வா்களை தகுதி நீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் தோ்வு எழுதத் தடை விதித்துள்ளது. தரவரிசைப் பட்டியலில் வந்துள்ள 39 தோ்வா்களுக்குப் பதிலாக தகுதியான வேறு 39 நபா்கள் தெரிவு செய்து அறிவிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் முறைகேடாக முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்ற 39 பேருக்குப் பதிலாக  புதிய நபர்களை உள்ளடக்கிய தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து புதிதாகத் தேர்வு பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை இணையதளத்தின் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என்றும், இதற்கு வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!