2020 - 21ம் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% ஆக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கை
by DINஏப்ரல் 1ம் தேதி தொடங்கும் 2020 - 21ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 - 6.5% ஆக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், 2020- 21ம் நிதியாண்டில் ஜிடிபி எனப்படும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது ஆறு சதவீதம் முதல் 6.5 சதவீதம் என்ற அளவுக்குள் இருக்கும். இதில் தொழில்துறை வளர்ச்சியானது 2.5% ஆகவும், வேளாண் துறையின் வளர்ச்சியானது 2.8% ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதா நிறத்தில் அச்சிடப்பட்டிருக்கும் பொருளாதார ஆய்வறிக்கையானது, வளர்ச்சியைப் புதுப்பிக்க நடப்பு நிதியாண்டிற்கான நிதி பற்றாக்குறை இலக்கு தளர்த்தப்பட வேண்டியிருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது.
2019 - 20ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக இருந்த நிலையில், 2020 - 21ம் நிதியாண்டில் இது 6% - 6.5% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக இந்தியாவில் முதலீடு வாய்ப்புகள் குறைந்து, அதனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா சந்திக்காத பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது.
மேலும் பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிப்பதாவது..
வரும் நிதியாண்டில், கணிக்கப்பட்டதைவிடவும் குறைவாகவே வரி வசூலாகும்.
வெங்காயத்தின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு எடுத்த எந்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, உற்பத்தித் துறையில் புதிய யோசனைகள் செயல்படுத்தப்பட்டு, உலகுக்காக இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது ஏராளமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
'உலகுக்காக இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் மூலம் 2025ம் ஆண்டில் இந்தியாவில் 5 கோடி வேலைவாய்ப்புகளையும், 2030ம் ஆண்டில் 8 கோடி வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.
பொதுத் துறை வங்கிகளின் நிர்வாகத்தை கூடுதலாக மேம்படுத்த வேண்டும் மற்றும் வெளிப்படைத் தன்மையால் மக்களுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்துவதும் அவசியம்.
வணிகத்தை எளிதாக்கும் வகையில், துறைமுகங்களில் இருக்கும் சிவப்பு நாடா முறையை ஒழித்து, ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
புதிதாக தொழில் தொடங்குவோருக்கான விதிகளை எளிமையாக்குதல், சொத்துகளை பத்திரப்பதிவு செய்வது, வரி செலுத்துவது, ஒப்பந்தங்களை பெற்று பணிகளை மேற்கொள்வதுபோன்றவற்றுக்கான விதிமுறைகளும் எளிமையாக்கப்பட வேண்டும்.
தற்போது இந்தியாவில் தொழில்தொடங்குவதற்கும் சொத்துகளை பதிவு செய்வதற்கும் கடுமையான விதிகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
புதிய தொழில் தொடங்க குறைந்தது 18 நாட்களும், 10 விதமான நடைமுறைகளையும் செய்ய வேண்டியுள்ளது. தில்லியில் ஒரு ரெஸ்டாரென்ட் துவங்கி, உரிமம் பெற 45 விதமான ஆவணங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அதே சமயம், ஒரு துப்பாக்கியை வெறும் 19 ஆவணங்களைக் கொடுத்து வாங்கி விட முடிகிறது.
உதாரணமாக நியூஸிலாந்தை எடுத்துக் கொண்டால், அந்நாட்டில் ஒரு புதிய தொழில் தொடங்க ஒரே ஒரு விண்ணப்பம் போதும். அதுவும் அரைநாளில் அனைத்துப் பணிகளும் முடிந்துவிடும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.