கோத்தா மரண சான்றிதழ் கொடுப்பதை ஏற்கோம்; மன்னிப்பு சபை

by
https://1.bp.blogspot.com/-kVPK1FhAB1U/XjRFoOrUJYI/AAAAAAAAGD4/d6gjwISt158PrewVyiK8NaekDP2B4fEygCNcBGAsYHQ/s1600/IMG_20200131_194307.jpg

முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை, அரசாங்கம், அவர்களுடைய உறவினர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய ஆய்வாளர் தியாகி ருவன் பத்திரண தெரிவித்துள்ளார்.

நேற்று (30) கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். மேலும்,

வடக்கில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு என்ன ஆனது என்பதைக் கோரி, தாய்மார்கள் கடந்த மூன்று வருடங்களாக போராட்டங்களை செய்து நீதியைக் கோரி வருகின்றார்கள். ஆனாலும் இன்று வரை அவர்களுக்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை.

கடந்த அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட, 30 இன் கீழ் ஒன்று என்கிற தீர்மானத்தின் படி, காணாமல் போனோர் பற்றிய ஆணைக்குழுவை அமைத்தது. அதுகுறித்த விசாரணைகளை குறித்த ஆணைக்குழுவே நடத்தி வருகிறது.

இருப்பினும் இந்த வருடத்தில் நாங்கள் கண்டோம் சர்வதேச ஊடகங்களிலும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அண்மையில் ஐ.நா பிரதிநிதிகளை சந்தித்திருந்த போது, காணாமல் போனோர் பற்றி விசாரணை நடத்தி மரணச் சான்றிதழ் வழங்குவதாக கூறியிருந்தார். ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு நாங்கள் இணங்க முடியாது.

சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டங்களுக்கு அமைய விசாரணை நடத்தி, என்ன நடந்தது என்பதை அவர்களின் உறவினர்களுக்கும் பெற்றோருக்கும் கூற வேண்டும். சட்டரீதியாக அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியதைப்போல, காணாமல் போனோருக்கு மரணச்சான்றிதழ் அளிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது - என்றார்.