‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ கோஷம் பொய்யா? திமுக, அதிமுக செய்தது சரிதான்.. பாஜக ‘அங்கீகாரம்’ – மின்முரசு
டெல்லி: திராவிட கட்சிகளால்தான் தமிழகம் வீழ்ந்தது என தொடர்ந்து சொல்லி வரும் பாஜக, டெல்லியில், அதே திராவிட கட்சிகளின் வியூகத்தை கையில் எடுத்துள்ளது. இலவசங்களை கொடுத்து தமிழகத்தை குட்டிச் சுவராக்கிவிட்டனர் என்று ஒருபக்கம் கூறிக் கொண்டே, நாட்டின் தலைநகரில் அதே திட்டத்தை அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருகிறது.
ஆம்.. டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜகவின் டெல்லி மாநில தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர் கட்சி தலைவர்கள். அதில் பல திட்டங்கள், ஏற்கனவே நீண்ட காலமாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வருபவைதான்.
இதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான, திட்டங்கள் என்றால், கிலோ கோதுமை மாவு 2 ரூபாய், 9ம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், ஏழை கல்லூரி மாணவிகளுக்கு இலவச எலக்ட்ரிக் ஸ்கூட்டி போன்றவற்றை சொல்லலாம்.
செலவீனம்
இந்த திட்டங்கள் அதிகம் செலவுபிடிக்க கூடியவைதான். இதனால்தான் சாத்தியமா என்ற கேள்வியை இத்தனை ஆண்டுகாலமாக தேசிய கட்சிகள் கேட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் இவை எப்போதோ அறிமுகம் செய்து, வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்தான். இன்று நேற்றல்ல, 1967 மே மாதமே ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தை முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா, நடைமுறைக்குக் கொண்டு வந்தார். ஆனால் அந்த காலகட்டத்தில் போதிய உணவு தானிய உற்பத்தி இல்லை என்பதால் பிறகு அது கைவிடப்பட்டது. ஆனால் விடவில்லை திமுக. 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக வென்று ஆட்சிக்கு வந்ததும், கிலோ அரிசி ரூ. 2க்கு என்ற திட்டம் அமலாக்கப்பட்டது. 2008ல் அது மேலும் தளர்த்தப்பட்டு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற திட்டமாக மாற்றப்பட்டது.
இலவச அரிசி
அதிமுக மற்றொருபடி முன்னே சென்றது. 2011ல் ஜெயலலிதா ஆட்சியில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. கிராமப்புற ஏழைகளுக்கும் உணவு தானியங்களை வழங்க வேண்டுமென முடிவெடுத்துதான்அனைவருக்கும் ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டன. ஆனால், கடைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. இதையடுத்து அண்ண ஆட்சி காலம் தொட்டே, ரேஷன் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அது இன்னும் தீவிரப்படுத்தப்பட்டது. ரேஷன் கடைகளை அதிகரிப்பது சமீப காலம்வரை நீடித்தது. இதனால் பொது விநியோகத்தில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களை சென்றடைந்த ஒரே மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது.
இலவச சைக்கிள்
கிராமப்புறங்களில் உள்ள மாணவ, மாணவிகள் நெடு தூரம் நடந்து பள்ளிக்கு செல்வதை தவிர்க்கும் பொருட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2001ம் ஆண்டு 11ம் வகுப்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இத்திட்டம் விரிவாக்கப்பட்டது. 2005- 2006ம் கல்வியாண்டில் இருந்து 11ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.
ஸ்கூட்டி
கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. அப்போது, தேர்தல் அறிக்கையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண்களுக்கு மானிய விலையில் கியர் இல்லாத ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஜெயலலிதா மறைந்த நிலையில், 2018 பிப்ரவரி மாதம், அவர் பிறந்த நாள் தினத்தில், அம்மா ஸ்கூட்டி திட்டம் சென்னையில் துவங்கி வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவில் பங்கேற்று திட்டத்தை துவங்கி வைத்தார். இந்த நிலையில்தான், பாஜக இப்போது திமுக, அதிமுக திட்டங்களை காப்பியடிக்க ஆரம்பித்துள்ளது. இதன்மூலம், இலவசங்களால் மக்கள் நலன் பெற்றுள்ளார்களே தவிர, கெட்டுப்போகவில்லை என்பதற்கு பாஜக அங்கீகாரம் வழங்கிவிட்டது.
Source: OneIndia
vikram
Post navigation
திடீர் திருப்பம்: நிர்பயா கொலை குற்றவாளிகளை நாளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை!ஆஸ்திரேலியா ஓபன்: ஸ்வேரேவ்-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் டொமினிக் தீம்
Related Posts
தஞ்சை கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த அனுமதி – மதுரை உயர்நீதிநீதி மன்றம் தீர்ப்பு
மடியை நனைக்கும் நதியே…6 நிமிட வாசிப்பு“பச்ச உடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லு… பிள்ளைக்குத் தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு” என்று கிழக்குச…
murugan Feb 1, 2020Feb 1, 2020 0 comment