http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_118526637554169.jpg

சீனாவில் உள்ள தமிழர்களை மீட்கக்கோரிய வழக்கு : மத்திய, மாநில அரசு பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: கொரோனா வைரஸ் பாதித்த சீனாவில் சிக்கியுள்ள தமிழர்களை பத்திரமாக மீட்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சீனாவில் இருக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுப்பது பற்றி பிப்.18-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சீன நாட்டில் புதுவகையான கொரோனா வைரஸ் பாதித்திருப்பது கடந்த ஜன.7ல் கண்டறிப்பட்டது. பல்லாயிரம் பேர் பாதித்துள்ளனர். சீனா முழுவதும் மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. படிப்பிற்காகவும், வேலைக்காகவும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சீன நாட்டிற்கு சென்றுள்ளனர்.

அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, சென்னை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் சீனாவில் உள்ளனர். தற்போது அவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. உணவு, மருத்துவ வசதி கிடைக்கவில்லை. தங்களை பாதுகாத்துக் கொள்ள நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். சீனாவிலுள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்புவதே அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

ஆனால், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் நாடு திரும்ப முடியவில்லை. அங்கிருப்போர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டாலும், உரிய பதில் கிடைக்காத நிலை உள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு இவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பவும், மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மதுரை, மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த சமயசெல்வம், ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று  என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.