http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_348735988140107.jpg

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு : டிஎன்பிஎஸ்சி, சிபிசிஐடி, சிபிஐ பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை, :குரூப்-4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்குமாறு சிபிஐக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஐகோர்ட் கிளையில் மனு

மதுரையை சேர்ந்த வக்கீல் முகமது ரஸ்வி ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டி தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தற்போது குரூப் 1 மற்றும் 2 தேர்வுகளிலும், காவலர் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், போலீசார், வருவாய்த்துறை உள்ளிட்ட பலருக்கும் இதில் பங்கு இருக்கலாம்.  இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தால் விசாரணை முறையாக நடக்காது. போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை கண்காணிக்க தன்னிச்சையான அமைப்பை உருவாக்கவும், அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும். குரூப் 4 தேர்வு முறைகேட்டின் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர சிபிஐ விசாரணை தேவை. ஆகவே குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ, சிபிசிஐடிக்கு உத்தரவு

இந்த மனுவை இன்று விசாரிதத நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ,முறைகேடு குறித்த விசாரணை சிபிசிஐடி போலீசாரால்  முறையான பாதையிலேயே விசாரிக்கப்பட்டு, குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தேவையில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மனுதாரர் தரப்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் கீழ் நிலையில் உள்ளவர்கள், ஆனால் இந்த முறைகேட்டில் உயர்மட்ட அதிகாரிகளும் சம்பந்தப்பட்டு இருக்கலாம். உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால் மாநில போலீஸ் விசாரணையில் உண்மை வெளிவராது. குரூப் 4 தேர்வு முறைகேட்டின் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர சிபிஐ விசாரணை தேவை. ஆகவே குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதனை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் சிபிஐயை மனுதாரர்களால்  சேர்த்து,
உள்துறை செயலாளர், சிபிஐ இணை இயக்குனர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் டிஎன்பிஎஸ்சி மற்றும் சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.