தமிழகத்தில் கரோனா பாதிப்பில்லை; தொடர் கண்காணிப்பில் 242 பேர்: அமைச்சர் சி. விஜயபாஸ்கர்
by DINவிராலிமலை: கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய 242 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
அவர்கள் 242 பேரும் சுகாதாரத் துறையின் நேரடி தோடர்பில் உள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இலுப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியது: சீனாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த சில நாள்களில் சீனாவில் இருந்து தமிழகம் வந்த 242 பேர் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரதுறையின் நேரடி மேற்பார்வையிலும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிலும் உள்ளனர்.
சீனாவில் இருந்து திருவண்ணாமலை திரும்பிய இளைஞருக்கு கரோனா வைரஸ் இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
கரோனா வைரஸ் குறித்த வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாள் ஒன்றுக்கு 15 முறை கைகளை அலம்ப வேண்டும், பொது இடங்களில் மக்கள் இருமல் மற்றும் தும்மும் போதும் தங்களது கைக்குட்டையால் முகத்தை மறைக்க வேண்டும் என்றார்.
மேலும் படிக்க.. தமிழகத்தில் கரோனா? கண்காணிப்பில் திருவண்ணாமலை மென்பொறியாளர்
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதித்ததாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். கரோனா வைரஸ் பற்றி மக்கள் பீதியடையாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை.
சீனாவில் இருந்து திரும்பிய திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. அவருக்கு சாதாரண சளித் தொந்தரவு தான் உள்ளது. அதேப்போல கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா வைரஸ் இருப்பதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை. கிருஷ்ணகிரியிலும் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை.
பொதுமக்கள் அனைவரும், பீதியடையாமல், சுகாதாரத்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். யாரும் வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.