https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/original/Z_EGG_EATING.jpg

முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதா, கெட்டதா?

by

முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதா, கெட்டதா என்பது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், இறுதியில் பல கலவையான முடிவுகளே வெளியாகின்றன. எனினும், சமீபத்திய ஆராய்ச்சியில் நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை சாப்பிட்டால் இதயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வினை மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் ஹாமில்டன் ஹெல்த் சயின்ஸ் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் முட்டை சாப்பிடுவதற்கும், ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

முட்டைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்து உணவாக இருக்கிறது. மேலும், மலிவான விலையிலும் கிடைக்கிறது. ஆனால், வயதானவர்கள் அதிகம் முட்டை சாப்பிடக்கூடாது என்ற பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது. இருப்பினும், வயதானவர்கள் வாரத்திற்கு மூன்று முட்டை மட்டும் எடுத்துக்கொள்வது சிறந்தது என்றுஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

21 நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்து 46 ஆயிரத்து 11 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். ஆய்வில் பெரும்பான்மையான நபர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை உட்கொண்டனர். அவர்களுக்கு பெரும்பாலும் உடல்ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இறுதியில், முட்டை அளவாக உட்கொள்வது இதயத்திற்கு எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தாதது என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!