https://s3.amazonaws.com/adaderanatamil/1580462073-ajith-prasanna-2.jpg

அஜித் பிரசன்ன உள்ளிட்ட 3 பேரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன மற்றும கடற்படை புலனாய்வுப்பிரிவின் உறுப்பினர்கள் இருவரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படை புலனாய்வு பிரிவின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கு தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்காவது பிரதிவாதியான விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினரான டீ.எம்.விஜயகாந்தன் மற்றும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டதாக கூறப்படும் கஸ்தூரிகே காமினி என்ற சந்தேகநபரின் மனைவி ஆகியோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதவான் இரகசிய பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.