தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை அதிகரிப்பு
பரமக்குடி : பரமக்குடி பகுதியில் மூன்று ஆண்டுகளாக போதிய மழையின்றி வறண்டு காணப்பட்ட தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில், இந்தாண்டு போதிய மழை பெய்ததால் நீர்நிலைகள் நிரம்பியதால் வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வர துவங்கியுள்ளன. தமிழகத்தில் வறட்சியான மாவட்டம் எனப்பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல், மேல செல்வனூர், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, சக்கரைக்கோட்டை ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இந்தச் சரணாலயங்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கூழைக்கடா, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை, செங்கால் நாரை உள்ளிட்ட ஏராளமான பறவை இனங்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக வந்து தங்கிச் செல்கின்றன. அக்டோபர் மாதம் துவங்கி, மார்ச் மாதம் வரை இந்தப் பறவைகள் இடம்பெயர்ந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.
இதில் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், நீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் இனப்பெருக்கம் மற்றும் பருவ நிலை மாற்றங்களை அனுபவிக்க வரும் அரிய வகை வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டன. பாளம் பாளமாக வெடித்திருந்த நீர் நிலைகளில் ஆங்காங்கே தேங்கியிருந்த கலங்கலான தண்ணீரை தேடி அலையும் நிலைக்கு பறவைகள் தள்ளப்பட்டன. பறவைகளின் வருகையை அதிகரிக்க, வனத்துறையினர், மழை காலத்துக்கு முன்னதாகவே நீர்நிலைகளை தூர்வாரும் நடவடிக்கைகளில் இறங்கினர். இதனால் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் நீர் நிரம்பியுள்ளன.
இதுகுறித்து வனபாதுகாவலர் சதீஷ் கூறுகையில், ‘‘எழில் கொஞ்சும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலய சூழலை அனுபவிக்க இந்தாண்டு புள்ளி அழகு கூழை கிடா, மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை உள்ளிட்ட 50 வகையான 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்துள்ளன. தீபாவளி உள்ளிட்ட முக்கியமான பண்டிகை நாட்களில் பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பட்டாசு வெடிக்காமல் உள்ளனர் இப்பகுதி மக்கள்.
தேர்த்தங்கல் பகுதி மக்கள் வனத்துறையினருடன் இணைந்து ஆண்டுதோறும் “பறவைகளை பாதுகாப்போம், பறவைகளை வேட்டையாட மாட்டோம் “ என உறுதி மொழி எடுத்து கொள்கின்றனர். கடுமையான வறட்சியால் கடந்தாண்டு வெறும் 5 ஆயிரம் பறவைகள் மட்டுமே வந்தன. இதனையடுத்து வனப்பகுதிகள், நீர்வரத்து பகுதிகளை தூர்வாரியது மற்றும் நல்ல மழை பொழிவு காரணமாக வனபகுதியில் நீர் தேங்கி இருப்பதால் இந்தாண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. இனப்பெருக்கம் முடிந்த பின் பிப்ரவரி மாதம் பறவைகள் மீண்டும் சென்று விடும்’’ என கூறினார். தேர்த்தங்கல் சரணாலயத்தில் இதே பராமரிப்பையும் பாதுகாப்பையும் எப்போதும் வழங்க வேண்டும் என பறவையின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.